குடிமராமத்து பெயரில் மணல் கொள்ளை சப்-கலெக்டர் நேரில் ஆய்வு

சாயல்குடி, செப். 21: முதுகுளத்தூர் பகுதியில் குடிமராமத்து பெயரில் நடந்த மணல் கொள்ளை குறித்து தினகரனில் செய்தி வெளியானது. இதையடுத்து மணல் கொள்ளை நடந்த பகுதிகளில் பரமக்குடி உதவி கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையிலான மூன்று துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர். குடிமராமத்து பணிகளை மாநில கண்காணிப்பு குழு ஆய்வு செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுப்பணித்துறை சார்பில் குண்டாறு முதுகுளத்தூர் உபகோட்டம் சார்பில் கீழச்சிறுபோது, எஸ்.தரைக்குடி, பேய்க்குளம், கண்ணத்தான், தத்தங்குடி உள்ளிட்ட 9 ஊர்களில் ரூ.32 கோடி மதிப்பில் குடிமராமத்து எனும் கண்மாய் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் தத்தங்குடி கண்மாயில் குடிமராமத்து என்ற பெயரில் விதிமுறைகளை மீறி, ஆழமாக தோண்டி, மணல் கொள்ளையில் சிலர் ஈடுபட்டு, பல கோடி ரூபாய் சுருட்டினர்.

இதனால் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானது.

இதனையடுத்து பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்னுசந்திரன், சிக்கல் குரூப் வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ. தலையாரி ஆகியோர் மீது ஏன் மணல் கொள்ளையை கண்காணிக்கவில்லை என விளக்கம் கேட்டு, 17(பி) நோட்டீஸ் அனுப்பினார். உடந்தையாக இருந்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மீது குற்ற விசாரணை முறைச்சட்டம் 133 விதியின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டது. கனிமவளத்துறையிடம் மணல் கொள்ளையை உறுதிசெய்து ஆய்வறிக்கை தரும்படியும் கேட்கப்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கனிமவளத்துறை அதிகாரிகளின் நேரடி ஆய்வுக்குப்பின் குடிமராமத்து பெயரில் தத்தங்குடி கண்மாய் மணல் கொள்ளையில் ஈடுபட்டு, இயற்கை வளத்தை அழித்து, விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தி, அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து நேற்று சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன், கடலாடி தாசில்தார் முத்துலெட்சுமி, உதவி தாசில்தார் செந்தில்வேலன், கனிமவளத்துறை துணை தாசில்தார் வீரராஜா, பொதுப்பணித்துறை உதவிபொறியாளர் கண்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, மணல் கொள்ளை நடந்த பகுதிகளில் அளவீடு செய்தனர். இதுகுறித்து சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன் கூறும்போது, ‘குடிமராமத்து பெயரில் மணல் கொள்ளை நடந்தது உறுதிசெய்யப்பட்டு, விதிமுறைகளை மீறி அள்ளப்பட்ட பகுதிகளில் அளவீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மதிப்பீடு தயார் செய்து அபராதம் விதிக்கப்படும், மணல் கொள்ளையை கவனிக்க தவறிய அரசு அலுவலர்கள் மீது, விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. போதிய அவகாசம் முடிந்த பிறகு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

விவசாயி சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘முதுகுளத்தூர் உப கோட்டத்தில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை விருதுநகர் கோட்டம், வைப்பார் வடிநில உபகோட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான குழு நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும், தத்தங்குடியில் மணல் அள்ளிய கும்பல் மாவட்டம் முழுவதும் மணல்கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. அக்கும்பல்களின் பினாமிகளின் பெயரில் போலியாக விவசாயிகள் என கணக்கு காட்டி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் குடிமராமத்து பணிகளை கொடுத்துள்ளனர். எந்த பணியும் முறை யாக நடக்கவில்லை.

பணிகள் முடிவதற்குள்  பாதி பணம் வழங்கப்பட்டுவிட்டதால் அரசு பணம் பல கோடி ரூபாய் விரயமாகிவிட்டது. முறைகேடான குடிமராமத்து பணிகளால் விவசாயத்திற்கு பயன் அளிக்கவில்லை. பருவமழையும் பெய்ய துவங்கியுள்ளது. இதனால் பணிகள் நிறுத்தபட வேண்டும். அடுத்தாண்டு கோடையில் பணிகளை துவங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: