போதிய விலை இல்லை சூரியகாந்தியை அரசே கொள்முதல் செய்யுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

பழநி, செப். 21: பழநி பகுதியில் சூரியகாந்திற்கு போதிய விலை கிடைக்காததால் அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. இங்குள்ள விவசாயிகள் இப்பகுதியில் உள்ள அணைகளையும், அணைகளில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் கண்மாய்களை நம்பியுமே விவசாயம் செய்து வருகின்றனர். கிணற்றுப்பாசனம் மூலமாக மானாவாரி விவசாயிகளும் பயிரிட்டு உள்ளனர். பழநி அருகே ஆயக்குடி, கணக்கன்பட்டி, கோம்பைபட்டி, சத்திரப்பட்டி பகுதிகளில் உள்ள ஏராளமான விவசாயிகள் சூரியகாந்தியை அதிகளவு பயிரிட்டுள்ளனர். ஆனால், இதற்கு போதிய

விலை கிடைப்பதில்லை. இதனால் சூரியகாந்தி விவசாயிகள் நஷ்டமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி முருகேசன் கூறியதாவது, 1 ஏக்கருக்கு சூரியகாந்தி விளைவிக்க சுமார் 1.5 கிலோ அளவிற்கு சூரியகாந்தி விதை தேவைப்படுகிறது. இவற்றின் விலை சுமார் ரூ.1300 வரை உள்ளது. இதன்பின் 3 மாதங்களை நுண்ணுரம், உரம், நீர்ப்பாய்ச்சுதல், அறுவடை போன்றவற்றிற்கு என சுமார் ரூ.10 ஆயிரம் வரை செலவாகிறது. இதன்மூலம் சுமார் ஏக்கருக்கு 400 கிலோ சூரியகாந்தி வித்துக்கள் கிடைக்கிறது.அரசு கொள்முதல் இல்லை.

தனியார்தான் கொள்முதல் செய்கின்றனர். அவர்கள் கிலோ ஒன்றிற்கு ரூ.50 முதல் ரூ.55 வரை மட்டுமே தருகின்றனர். இதனால் ஏக்கருக்கு விவசாயிகளுக்கு கிடைக்கும் தொகை சுமார் ரூ.18 ஆயிரம் மட்டுமே.

இதனால் விவசாயத்தையே கைவிட்டு விடலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. எனவே, அரசே சூரியகாந்தி வித்துக்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: