உயர்நீதிமன்ற உத்தரவு பழநி கோயில்களில் நீதிபதிகள் குழு ஆய்வு

பழநி, செப். 21: உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பழநி கோயில்களில் நீதிபதிகள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட கோயில்களை அந்தந்த மாவட்ட நீதிபதிகள் நேரில் பார்வையிட்டு கோயில் கட்டமைப்பு, பக்தர்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள கோயில்களில் நீதிபதிகள் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நேற்று பழநி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி நம்பி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கோயில்களில் காற்று வெளியேற்றும் இயந்திரம் சரியாக வேலை செய்கிறதா, மின்விளக்கு வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது தகவல் பலகையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகள் இடம்பெற்றிருக்க அறிவுறுத்தினர். தொடர்ந்து பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையம், முடிக்காணிக்கை மண்டபங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டது. ஆய்வின்போது பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

Related Stories: