கும்பகோணம் ரயில் நிலையத்தில் பயணியின் உடமைகளை திருடிய வாலிபர் விரட்டி பிடிப்பு

கும்பகோணம், செப். 21:  கும்பகோணத்துக்கு நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு சென்ற பயணிகள் ரயில் வந்தது. முதலாவது நடைமேடையில் ரயில் வந்து நின்றது. பின்னர் திருச்சிக்கு புறப்பட்டது. ரயில் புறப்படும் நேரத்தில் பாபநாசத்தை சேர்ந்த காமராஜ் (61) என்பவரிடமிருந்து 2 பைகளை எடுத்து கொண்டு ஒரு வாலிபர் தப்பியோடினார். அப்போது கமாராஜ் சத்தம் போட்டார். இதையடுத்து ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர்  மணிமாறன் மற்றும் ரயில்வே போலீசார் விரட்டி சென்று லால் பகதூர் சாஸ்த்ரி ரோட்டில் வாலிபரை பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், திருவிடைமருதூர் அடுத்த கோவிந்தபுரம் சன்னதி தெரு முத்துக்கருப்பன் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து கைப்பைகளை பறிமுதல் செய்து முத்துக்கருப்பனை கைது செய்தனர். பைக் விபத்தில் மேலும்  ஒருவர் பலி:  பூதலூர் அருகே திருவேங்கடஉடையான்பட்டியை சேர்ந்தவர் ராகுல்காந்தி (25). இவர் தனது உறவினர் சாலியமங்கலம் மாதா கோவில் தெருவை சேர்ந்த டென்சிங்குடன் (25)  கடந்த 14ம் தேதி செல்லப்பன்பேட்டையில் இருந்து பூதலூர் நோக்கி பைக்கில் வந்தார். அப்போது பூதலூரில் இருந்து செங்கிப்பட்டி நோக்கி புதுப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் காமராஜ் (35) பைக்கில் சென்றார்.

முன்னால் சென்ற லோடு ஆட்டோவை முந்தி செல்ல முற்பட்டபோது எதிரில் வந்த ராகுல்காந்தி பைக் மீது காமராஜின் பைக் நேருக்குநேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராகுல்காந்தி பலியானார். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 15ம் தேதி டென்சிங் இறந்தார். காயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த காமராஜிம் நேற்று இறந்தார்.

இளம்பெண் தற்கொலை:  கும்பகோணம் அடுத்த ஆலமன்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ். தனியார் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ரஞ்சனாதேவி (23) என்பவருக்கு கடந்த ஓராண்டுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் அமல்ராஜிக்கும், ரஞ்சனாதேவிக்கும் கடந்த 10ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ரஞ்சனாதேவி தூக்கிட்டு கொண்டார். இதையடுத்து அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து சுவாமிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமணாகி ஒராண்டுகளுக்குள் இறந்ததால் கும்பகோணம் சப் கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி: கும்பகோணம் ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (45). ஆரோக்கியராஜுக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இவர் 10 ஆண்டுகளுக்கு முன் வெளிநாடு சென்றுவிட்டு தற்போது வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை கும்பகோணம் ரயில் நிலையம் அருகே செக்காங்கண்ணி ரயில்கேட் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஆரோக்கியராஜ் பலியானார். இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே புறக்காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ சிவராமன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: