மணல் கடத்தல் நடக்கும் ஏரியாக்கள் எவை? வருவாய்துறை ஆய்வுக்கூட்டத்தில் பட்டியலிட்ட கலெக்டர்

திருச்சி, செப்.19:  திருச்சி மாவட்டத்தில் மணல் கடத்தல் நடைபெறும் இடங்களை ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் வெளியிட்டார்.வருவாய்த்துறையில் செயல்படுத்தப்படும் மின்ஆளுமை திட்டம், சமூக பாதுகாப்புத்திட்டம், முதல்வர் உழவர் பாதுகாப்புத் திட்டம், வட்ட அளவிலான நிலஅளவை முன்னேற்றம், கொடிநாள் வசூல் முன்னேற்றம் ஆகியவை குறித்து வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருச்சி கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்து பேசியதாவது:

கடந்த 2016-2017, 2017-2018 ஆண்டுகளில் இளநிலை உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவ லர்கள் ஆகிய பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களில் வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் தகுதியின் அடிப்படையில் கருணை அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்களால் அரசின் திருமண உதவித்தொகை பெற பரிந்துரை செய்து வழங்கப்பட்ட வருமான சான்றின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்தல் வேண்டும். வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ஒருமாத காலத்திற்குள் மனுக்கள் மீது தீர்வு காண வேண்டும். பட்டா மாற்றம் வேண்டி ஆன்லைனில் வரப்பெற்ற மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டும்.அனைத்து தாசில்தார்களும் அவரவர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும். மண்ணச்சநல்லூர், நொச்சியம், ரங்கம், கோரையாறு, உத்தமர்சீலி, மருங்காபுரி, வளநாடு, கைகாட்டி, திருவெறும்பூர், மண்பாறை ஆகிய இடங்களில் இருந்து கள்ளத்தனமாக ஆறுகளில் மணல் எடுப்பதாக புகார்கள் வருகிறது.

இப்பகுதி தாசில்தார்கள் கூடுதல் கவனம் செலுத்தி மணல் திருட்டை தடுத்து, அவற்றுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், அதன் விவரத்தை உடனடியாக எனக்கு தெரிவிக்க வேண்டும். வியாபார நோக்கில் நீர் நிலைகளில் வண்டல் மண் எடுப்பதை அனுமதிக்க கூடாது’ என்றார். நிலஅளவை தொடர்பாக லால்குடி, துறையூர், மண்ணச்சநல்லூர், தொட்டியம் ஆகிய தாலுகாகளில் மனுதாரர்கள் அளித்த 908 மனுக்கள் மீது 15 நாளில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். விபத்து நிவாரண நிதி, விதவை சான்றிதழ்கள், முதியோர் உதவித் தொகை ஆகியவை வழங்கிய விவரம் குறித்து ஆய்வு செய்தார்.டிஆர்ஓ சாந்தி, ஆர்டிஓக்கள் பொன்ராமர் (ரங்கம்), பாலாஜி (லால்குடி), ரவிச்சந்திரன் (முசிறி), அன்பழகன் (திருச்சி), உதவி இயக்குநர் (நிலஅளவை) சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: