ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் எச்.ராஜாவை ைகது செய்யக்கோரி இந்து அறநிலையத்துறையினர் மனு திருச்சி போலீஸ் கமிஷனர், எஸ்பியிடம் அளித்தனர்

திருச்சி, செப்.18:  ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் எச்.ராஜாவை கைது செய்யக்கோரி போலீஸ் கமிஷனர், எஸ்பியிடம் இந்து அறநிலையதுறை கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அனைத்து பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மண்டல தலைவர் கல்யாணி தலைமையில் 200க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:இத்துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் கடமை உணர்வுடன் இரவு, பகல் பாராது பணிபுரிந்து வரும் நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா அறநிலையத் துறையின் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார். இத்துறை அலுவலர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி அநாகரீகமான முறையிலும் மிகவும் தரக்குறைவாகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் அரசு அலுவலர்களாகிய எங்களை விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

கடந்த 2ம் தேதி சென்னையில் நடந்த உண்ணாவிரத்ததில் கொலை மிரட்டல் விடுக்கும் தொணியில் அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலை ‘தோலை உரிக்க வேண்டும்’ என்றும், முன்னாள் ஆணையர் ஜெயாவை ‘மாவோயிஸ்ட்’ என்றும், ‘இஓக்கள் எல்லாம் யாரடா? கோயிலை விட்டு வெளியில் போங்கடா’ என்றும் மரியாதை குறைவாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். அநாகரீகத்தின் உச்சக்கட்டமாக திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் நடந்த கூட்டத்தில் அறநிலையத்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் குறித்தும், எங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களின் மாண்பை குறைக்கும் வகையிலும், எங்கள் குடும்ப பெண்கள் விலைமாதர்கள் போன்று சித்தரித்தும் நாகூசும் அளவில் பேசி மானபங்கத்திற்கு இணையான அநாகரீக செயலை புரிந்துள்ளார். இது எங்களுக்கும் எங்கள் குடும்ப பெண்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.எனவே எச்.ராஜா மீது ‘பெண்களை இழிபடுத்துதல், அரசு அலுவலர்களை தரக்குறைவாக இழிவாக பேசுதல், மனம் புண்படும்படி பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்குதல், அரசு பணி செய்யவிடாது தடுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல், குற்றமுறு அவதூறு ஆகிய குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பிணையில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளில் குற்ற வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து மண்டல தலைவர் கல்யாணி கூறுகையில், ‘எச்.ராஜா தொடர்ந்து அறநிலையத்துறையை கேவலமாக விமர்சித்து வருகிறார். உச்சக்கட்டமாக பேசிய எச்.ராஜாவை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும்’ என்றார்.

Related Stories: