பவானி ஆற்றங்கரையில் குப்பை கொட்டும் நகராட்சி நிர்வாகம்

சத்தியமங்கலம், செப். 19:  சத்தியமங்கலம் மின்மயான வளாகத்தில் பவானி ஆற்றங்கரையோரம் நகராட்சி நிர்வாகத்தினர் குப்பை கொட்டுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  சத்தியமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 27 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பை நாள்தோறும் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் பாரம் ஏற்றி அத்தாணி சாலையில் தென்றல் நகர் அருகே உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. இந்நிலையில் கோட்டுவீராம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள மின்மயானத்திற்கு அருகே கடந்த சில நாட்களாக நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோட்டுவீராம்பாளையம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: நகராட்சிக்குட்பட்ட மின்மயானத்தின் மேற்குப்பகுதியில் ஆற்றங்கரையோரம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மயானத்திற்கு சொந்தமான இடத்தை குப்பை கிடங்காக மாற்ற யார் அனுமதி கொடுத்தனர் என்பது தெரியவில்லை. எந்த முன்னறிவிப்புமின்றி இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. ஆற்றங்கரையோரம் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளால் மழை பெய்யும்போது குப்பைக்கழிவுகள் ஆற்றுநீரில் கலந்து பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

குப்பை கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக மின்மயானத்திற்கு பொதுமக்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இப்பகுதியில் நகராட்சி குப்பைகளை கொட்டுவதை உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையெனில் இப்பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Related Stories: