சேலம்- சென்னை இடையே மாலை நேர விமான சேவை

சேலம், செப்.19: சேலம்- சென்னை இடையே மாலை நேரத்தில் விமான சேவை ெதாடங்குகிறது என்று சேலம் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தெரிவித்தார்.

7 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் சேலத்திலிருந்து சென்னைக்கு தினந்தோறும் ட்ரூஜெட் என்ற தனியார் விமான சேவை காலை நேரத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது ட்ரூஜெட் நிறுவனம் மாலை நேரத்தில் சென்னை- சேலம்- சென்னை வழித்தடத்தில் மேலும் ஒரு விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து சேலம் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் மாரியப்பன் கூறியதாவது: மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ‘உதான்’ திட்டத்தின் மூலம் 36 பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் ட்ரூஜெட் தனியார் நிறுவனம், கடந்த மே 25ம் தேதி முதல் காலை நேரத்தில் சென்னை-சேலம்- சென்னை வழிதடத்தில் தினசரி விமான சேவையை தவங்கியுள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆய்வுப்படி கடந்த 5 மாதங்களாக ட்ரூஜெட் விமானத்தின் இருக்கை அளவில் சராசரியாக 70 சதவீதமும், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கிட்டத்தட்ட 100 சதவீத பயன்பாடு இருப்பதாக புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது சென்னையில் காலையில் 9.50 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்திற்கு 10.40 மணிக்கு வந்து, இங்கிருந்து 11 மணிக்கு புறப்பட்டு காலை 11.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தை அடைகிறது. மேலும் மாலை நேரத்திலும், சேலத்திலிருந்து விமான சேவைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சேலம் தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர். இதை பரிசீலனை செய்து ட்ரூஜெட் நிறுவனமே மாலை நேரத்திலும் மேலும் ஒரு விமான சேவையை நடத்த அனுமதி வழங்கியுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.  வரும் அக்டோபர் 28ம் தேதி முதல் தினசரி மாலை 4 மணிக்கு சென்னையில் புறப்பட்டு, 5.10 மணிக்கு சேலம் வந்தடைந்து, சேலத்திலிருந்து 5.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.45 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சேரும் என ட்ரூஜெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்காக ஏடிஆர் 72 சிறிய ரக விமானம் பயன்படுத்தப்படும். 72 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் பயணம் செல்வதற்கான கட்டணங்கள் வழக்கமான கட்டணமாக இருக்கும். இரவு நேரத்தில் சென்னையிலிருந்து வெளிநாடு செல்லும் சேலம் பயணிகளுக்கும் டில்லி, கல்கத்தா, மும்பை, ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு சேலத்திலிருந்து பயணம் செய்பவர்களுக்கும், இந்த மாலை நேர விமான சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.  

Related Stories: