குறியாத்து கோம்பை தடுப்பணையில் தண்ணீர் கசிவால் 3 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி பாதிக்கும் அபாயம்

காடையாம்பட்டி, செப்.19:  காடையாம்பட்டி அருகே குறியாத்து கோம்பை தடுப்பணையில் நீர் கசிவால் 3 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.காடையாம்பட்டி அருகே கணவாய்புதூர் ஊராட்சிக்குட்பட்ட குறியாத்து கோம்பையில் கடந்த 12 ஆண்டுக்கு முன்பு ₹6 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது. சேர்வராயன் மலை பகுதியில் பெய்யும் மழைநீர் இந்த  தடுப்பணைக்கு பெருக்கெடுத்து வந்து தேங்குவது வழக்கம். பின்னர், அங்கிருந்து கணவாய்புதூர்,  வேப்பாடியாறு, வேப்பிலைப்பட்டி, கொங்கரப்பட்டி வழியாக தொப்பையாறு என்னுமிடத்தில் காவிரியில் கலக்கிறது.  இந்த தடுப்பணை நிரம்பினால் இப்பகுதியில் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். வாழை, நெல், கரும்பு, சோளம் உள்ளிட்ட முக்கிய பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில், தடுப்பணையின் கரை பகுதிகளில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வருகின்ற தண்ணீரை சுமார் 2 மாதம் வரை தேக்கி வைக்க முடியாமல் வீணாகி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர், தடுப்பணையில் கசிவு ஏற்பட்ட பகுதியை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மேட்டுப்பகுதியில் தடுப்பணை உள்ளதால் 30 அடிக்கும் கீழ் தண்ணீர் தேங்கி விடுகிறது. மேலும் உள் பகுதியில் திட்டு இருப்பதால் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தண்ணீர் வெளியேறுவதை தடுக்க முடியாமல் போகிறது. எனவே தடுப்பணையை தூர் வாரி கசியும் தண்ணீரை நிறுத்தலாம். இதனால் நீர் வீணாகாமல் தடுக்க முடியும். மேலும் 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே குறியாத்து கோம்பை நீர்த்தேக்க தடுப்பணையின் கரையை பலப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை  காக்க வேண்டும் என்றனர்.

Related Stories: