திமுக ஆட்சியில் கொண்டு வந்த நீராதார திட்டங்கள் முடக்கிவைப்பு : அர.சக்கரபாணி குற்றச்சாட்டு

திண்டுக்கல், செப். 18: திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீராதார திட்டங்களை ஆளும்கட்சி முடக்கி வைத்துள்ளது. மக்கள் பிரச்னைகளை மறந்து சம்பாதிப்பதிலே இந்த அரசு காலம் தள்ளி வருகிறது என்று ஒட்டன்சத்திரம் எம்எல்ஏ.சக்கரபாணி குற்றம் சாட்டினார்.ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தொப்பம்பட்டி ஒன்றியம் பெரும்பாலும் விவசாயப் பகுதிகளாக உள்ளன. ஆனால் வறட்சி காரணமாக தற்போது கிணறு, ஆழ்துளை குழாய்களில் நீர் வற்றி விட்டது. இதனால் பாசனத்திற்கு மட்டுமல்லாது குடிப்பதற்கும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையை தவிர்க்க கடந்த திமுக ஆட்சியில் சட்டமன்றப் பேரவை நிதிநிலை அறிக்கையில் கொத்தயம் நல்லதங்காள் அணைக்கட்டுத் திட்டத்திற்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 3.6.2010ல் அரசாணை வெளியிடப்பட்டு 2011ல் 80 சதவீதப்பணி நிறைவடைந்திருந்தது.இந்நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதும், திமுக காலத்தில் துவங்கப்பட்ட திட்டம் என்பதால் அதிமுக இத்திட்டத்தை கிடப்பில் போட்டது. தற்போது மீதமுள்ள பணிகள் நிறைவேற்ற ரூ.17.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஆனால் தொய்வுடன் மந்தகதியிலே நடக்கிறது. இதனால் தற்போது இப்பகுதி விவசாயம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி குடிநீருக்கும் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இப்பணியை விரைந்து நிறைவேற்றினால்தான் வரும் பருவமழை காலங்களில் மழைநீரை சேகரித்து குடிநீர்க்கும், பாசனத்திற்கும் பயன்படுத்த முடியும்.

இதுகுறித்து மனு கொடுக்க எம்எல்ஏ அர.சக்கரபாணி தலைமையில் இப்பகுதி விவசாயிகள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்தனர்.

அப்போது நிருபர்களிடம் சக்கரபாணி கூறியதாவது: ஆட்சி மாற்றத்தினால் நல்லதங்காள் திட்டம் முடங்கி கிடக்கிறது. இதுகுறித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. இந்த அணை 220 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன்மூலம் 30 கிராமங்கள் பலன்பெறும். ஆனால் திமுக கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே இதனை இந்த ஆட்சி முடக்கி வைத்துள்ளது. இதேபோல் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் வேடசந்தூர், ஆத்தூர், நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலனளிக்காத நிலையில் உள்ளது. மக்கள் பிரச்னைக்கு இந்த அரசு முக்கியத்துவம் தருவதே இல்லை. சம்பாதிப்பதிலேயே காலம் தள்ளி வருகிறது. பழநி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் போடப்பட்ட ரோடு 4 நாளிலேயே சேதமாகிவிட்டது’’ என்றார்.

உடன் நத்தம் எம்எல்ஏ.ஆண்டிஅம்பலம், ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன் உட்பட பலர் இருந்தனர்.

Related Stories: