வாழைத்தார் வரத்து குறைவு

கோவை, செப்.12: கோவைக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வர வேண்டிய வாழைத்தார்கள் 75 சதவீதம் வராததால், விவசாயிகள், வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். விநாயகர் சதுர்த்தி நாளை (13ம் தேதி) கொண்டாடப்படுகிறது. முன்னதாகவே  வாழைக்காய்களை கொண்ட தார்களை வியாபாரிகள் வாங்கி,

பழுக்க வைத்து இன்று(12ம் தேதி) மாலை முதல் பழங்களாக விற்பனை செய்வார்கள். அதற்கேற்ப கோவை தடாகம் ரோட்டிலுள்ள மாநகராட்சி வாழைத்தார் மொத்த விற்பனை மையத்திற்கு நேற்று பிற மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பல்வேறு ரக வாழைத்தார்களை கொண்டு வந்தனர். அவற்றை வியாபாரிகள் வாங்க வந்திருந்தனர். 25 டன் அளவிலான பல்வேறு ரக வாழைத்தார்கள் தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, பூண்டி, குளித்தலை, லால்குடி, கரூர், பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்தது. அவற்றின் நேற்றைய விலை விபரம் (கிலோ கணக்கில்) : பூவன் ரூ. 25, மோரிஸ் ரூ.12, ரஸ்தாளி ரூ.40, கற்பூரவள்ளி ரூ.38, நாடன் ரூ.38, நேந்திரன் ரூ.40, செவ்வாழை ரூ.45, கதளி ரூ.60, மொந்தன் ரூ.25, சக்கை ரூ.20. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: வழக்கமாக இங்கு தினசரி வரக்கூடிய அளவிலேயே 25 டன் வந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி சிறப்பு விற்பனையை முன்னிட்டு 100 டன் வரை வந்தால்,

போதுமான அளவிற்கு இருக்கும். ஆனால், 75 டன் குறைவாக வந்துள்ளது. வரத்து குறைந்ததால் வியாபாரிகளிடையே போட்டி ஏற்பட்டு, கிலோவிற்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது. வரத்து குறைந்ததற்கு, கடந்த மாதம் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு வாழைத்தார் சாகுபடி பகுதிகளில் பெய்யாததால், மகசூல் குறைந்து வரத்து பாதிக்கப்பட்டுள்ளதுஎன்றனர்.

Related Stories: