அரசு பணிகளில் ஆட்குறைப்பு ஆதிசேஷய்யா குழுவுக்கு கால நீட்டிப்பு ரத்து வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழுவில் வலியுறுத்தல்

தஞ்சை, செப்.12: அரசு பணிகளில் சீர்திருத்தம் என்ற பெயரில் ஆட்குறைப்பு செய்வதற்கு முன்னாள் தலைமை செயலாளர் ஆதிசேஷய்யா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்திருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தஞ்சையில் நடந்த வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தஞ்சையில் தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தங்க.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர்கள் வெங்கடாசலம், சக்கரவர்த்தி, பொருளாளர் அய்யம்பெருமாள், இணை செயலாளர் ராதா, மாவட்ட பிரச்சார செயலாளர் ரவிச்சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தரும.கருணாநிதி வரவேற்றார்.

Advertising
Advertising

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழக அரசால் அரசு பணிகளில் சீர்திருத்தம் என்ற பெயரில் ஆட்குறைப்பு செய்வதற்கு முன்னாள் தலைமை செயலாளர் ஆதிசேஷய்யா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவை உடனடியாக கலைக்க அரசு பணியாளர் சங்கங்கள் குரல் கொடுத்து கொண்டிருக்கிற நிலையில் அக்குழுவிற்கு மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்திருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.  வருவாய் நிர்வாக ஆணையரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கூர்நோக்கு பணியிடங்களில் ஒரு ஆண்டு மட்டுமே பணிபுரிய ஆணையிடப்பட்டுள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கூர்நோக்கு பணியிடங்களில் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் முதுநிலை வரிசைப்படி வட்ட பொறுப்பு வட்டாட்சியர்கள் நியமிக்கப்படவில்லை. உடனடியாக முதுநிலை வரிசைப்படி வட்ட பொறுப்பு வட்டாட்சியர்களை மாற்றி பணியமர்த்த வேண்டும். மேலும் வட்ட பொறுப்பில் ஒரு ஆண்டுக்கு மேல் பணிபுரியும் வட்ட பொறுப்பு வட்டாட்சியர்களையும் மாற்றம் செய்ய வேண்டும். மேலும் குறித்த காலத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் பட்டியல்களை வெளியிட வேண்டும்.

அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லும் வருவாய்த்துறையில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையான 21 மாத கால ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசு பணியாளர்கள் அனைவருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட இணை செயலாளர் லிங்கசாமி நன்றி கூறினார்.

Related Stories: