திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

சத்தியமங்கலம், செப். 11:  சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய அபாயகரமான மலைப்பாதை அமைந்துள்ளது. தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் இந்த மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் பேருந்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து பிஸ்கட் பாரம் ஏற்றிய கண்டெய்னர் லாரி, பெருந்துறை செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. 27வது கொண்டை ஊசி வளைவு அருகே இந்த லாரி திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் லாரி டிரைவர் தஞ்சாவூரை சேர்ந்த திருமாறன் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. லாரி கவிழ்ந்ததால் திம்பம் மலைப்பாதையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிரேன் மூலம் லாரி மீட்பதற்காக ஆசனூர் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். காயம்பட்ட டிரைவர் திருமாறன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: