ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருவிழா தபசு கோலத்தில் எழுந்தருளினார் அம்பாள் இன்று திருக்கல்யாணம்

ராமேஸ்வரம், ஆக.15: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் பதினொன்றாம் திருநாளான நேற்று காலை அம்பாள் தபசு கோலத்தில் எழுந்தருளினார். இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 4 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெற்றது. காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து பர்வதவர்த்தினி அம்பாள் தபசு கோலத்தில் வெள்ளி கமலம் வாகனத்தில் நான்கு ரதவீதியில் உலா வந்து, ராமதீர்த்தம் மண்டகப்படிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் 11 மணிக்கு ராமநாதசுவாமி தங்கரிஷபம் வாகனத்தில் ரதவீதியில் உலா வந்து ராமதீர்த்தம் மண்டகப்படிக்கு எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து மதியம் 3 மணிக்கு ராமதீர்த்தம் தபசு மண்டபகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது.

கோயில் இணை கமிஷனர் மங்கையர்கரசி, அறநிலையத்துறை உதவி கோட்டப்பொறியாளர் மயில்வாகனன் உட்பட ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாலை மாற்றுதல் வைபவத்தில் பங்கேற்றனர். மாலை மாற்றுதல் வைபவத்தையொட்டி நேற்று அதிகாலை 6 மணிக்கு பர்வதவர்த்தினி அம்பாள் தபசு கோலத்தில் ராமதீர்த்தம் மண்டகப்படிக்கு புறப்பாடானதை தொடர்ந்து, ராமநாதசுவாமி கோயில் நடை பகல் முழுவதும் அடைக்கப்பட்டது. மாலை மாற்றுதல் வைபவம் முடிந்து சுவாமி அம்பாள் கோயிலை வந்தடைந்ததும் மாலை 5 மணிக்கு மேல் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு கோயில் அனுமார் சன்னதியில் நிச்சயதார்த்தமும், 9 மணிக்கு தங்கப்பல்லக்கு வீதியுலாவும், அதிகாலை 2 மணிக்கு அம்பாள் பூப்பல்லக்கு உற்சவமும் நடைபெற்றது. ஆடித்திருவிழாவின் முக்கிய திருநாளான இன்று இரவு 8 மணிக்கு கோயில் தெற்குவாசல் திருக்கல்யாண மண்டபத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

Related Stories: