தனியார் மருத்துவமனைகளிலும் இலவச பிரசவம் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்

ராமநாதபுரம், ஆக.14:  தனியார் மருத்துவமனைகளிலும் பிரசவத்தை இலவசமாக வழங்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தரராஜபட்டிணத்தை சேர்ந்த நாகசாமி மகன் தர்மராஜன் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். இயற்கை பிரசவம் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச பிரசவம் வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தினார். பின்னர் அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘‘நமது நாடு வளர்ந்து வரும் நாடு, நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிகம் வாழும் நம் நாடு முன்னேற்றம் அடைய வேண்டுமானால் கல்வியையும், மருத்துவத்தையும் பாரத தேசம் முழுவதும் இலவசமாக அளிக்க வேண்டும். சுதந்திரம் பெற்ற பின்பு இன்று வரை கல்வியும் மருத்துவமும் மனிதநேயம் இல்லாத தொழிலாக மாறிவிட்டது. பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்ட போதிலும் பிரசவம் என்று வரும் போது கேள்விகுறியாக உள்ளது,

 

பிரசவம் என்பது மனிதபிறவியில் இயற்கையாக நடைபெற கூடிய ஒன்று. ரசாயனம் கலந்த உணவுகளை உண்பதால் மனித உடலில் பல மாற்றங்கள் வருகிறது அதனால் தான் பிரசவம் ஆப்ரேசன் மூலம் செய்ய வேண்டியுள்ளது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் ரசாயனம் கலந்த, அதன் மூலம் விளையக்கூடிய தானியங்களை உட்கொள்ளும் ஆடு, மாடு, கோழி, பூனை, நாய் போன்றவை இயற்கையாகவேதன் இனத்தை முறையாக அளிக்கின்றன. பன்றிகள் சாதாரணமாக 20 குட்டிகள் ஈன்று எடுக்கின்றன. காலத்திற்கேற்ப நமது அரசாங்கம் சட்டத்தை அடிக்கடி  மாற்றி அமைக்கிறது. அது போல தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்தை இலவசமாக அளிக்க சட்டத்தை இயற்ற வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: