இலவச வீட்டுமனைக்காக மனு கொடுக்க வந்த முன்னாள் ராணுவ வீரர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் 500 பேர் மனு கொடுத்தனர்

மதுரை, ஆக. 14: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். தோப்பூர் ஊராட்சி கே.புதுப்பட்டியில் குடியிருக்கும் 42 குறவர் சமுதாய மக்களுக்கு புதிய பட்டா வழங்க வேண்டும். அப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என குறிஞ்சியர் சமுதாய மக்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. சக்கிமங்கலத்தில் அனைத்து தரப்பினருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அரசு புறம்போக்கு இடத்தை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்வதாக ஜமால்மொய்தீன் புகார் கொடுத்தார். இலவச வீட்டுமனை கோரி 500க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நேற்று மனு கொடுக்க வந்தனர். அவர்களிடம் உங்களுக்கு தனியாக மனு வாங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கேட்க மறுத்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்பு அனைவரும் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு மனுவை வாங்க கோரி கோஷம் போட்டனர். அனைவரும் மனுவை பதிவு செய்ய உள்ளே வரும்படி அதிகாரிகள் அழைத்தனர். அப்போது முன்னாள் ராணுவ வீரர்களிடையை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு அனைவருடைய மனுவும் பெறப்பட்டு, முறையாக பதிவு செய்யப்பட்டது. அனைவரும் மனுக்களையும் அதிகாரிகள் பெற்றுக்கொண்டு அதற்கான ஒப்புகை ரசீது கொடுத்தனர். கூட்டத்தில் மொத்தம் 1044 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், பயிற்சி கலெக்டர் பிரவீன்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன், மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் நிர்மலா ராஜம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: