சாத்தனூர் அணையில் 500 மில்லியன் கனஅடி தண்ணீர் திறப்பு : குடிநீர் தேவைக்காக

தண்டராம்பட்டு, ஆக.7: குடிநீர் தேவைக்காக தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 500 மில்லியன் கனஅடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறந்துவிடப்பட்டது. தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. அணையில் தற்போது 94.15 அடி வரை தண்ணீர் உள்ளது. இந்த அணையில் இருந்து தென்பெண்ணையாறு வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த மக்களின் குடிநீர் தேவை, நீர்ப்பாசனத்திற்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக சாத்தனூர் அணையில் இருந்து நேற்று காலை 10 மணியளவில் வினாடிக்கு 500 மில்லியன் கனஅடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறந்துவிடப்பட்டது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில், கரையோர கிராம மக்களுக்கு தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுப்பது வழக்கம். ஆனால், நேற்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படுவது குறித்து எந்த முன்னறிவிப்பும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

Related Stories: