முழுப் பயன் தரும் முளைகட்டிய பயறு!

நன்றி குங்குமம் டாக்டர்

சத்தான உணவாக இருக்க வேண்டும்.  அதே நேரம்  வயிற்றைப் பதம் பார்க்காத நல்லதொரு மாலை நேர நொறுக்குத்தீனியாகவும் இருக்க வேண்டும் என்று  நினைப்பவர்களுக்கு  ஆரோக்கியம் நிறைந்த உணவாக இருக்கும் முளைகட்டிய பயறுகள்.முளை கட்டிய பயறில் உயர் தரமான நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஆகியவை உள்ளன. அதுவும் வேக வைக்காமல் பச்சையாக சாப்பிடும்போது அபரிமிதமான புரதம், கால்சியம், வைட்டமின்கள், மினரல்கள், என்சைம்கள் என்று ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. உடலுக்கு வலு அளிப்பதில் புரதத்திற்கு நிகரான சத்து வேறெதுவும் கிடையாது. பொதுவாக இறைச்சி உணவுகள், மீன், முட்டை போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளது என்றாலும், அசைவம் பிடிக்காதவர்களுக்கு அதற்கு நிகரான புரதச்சத்து வழங்கக்கூடிய உணவாக பயறு வகைகள் அமையும்.

முளை கட்டிய பயறுகளின் சுவையை அதிகரிக்க அதனுடன் தக்காளி, வெங்காயம், மிளகாய் அல்லது எலுமிச்சைச் சாறு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம் அல்லது  முளைகட்டிய பயறுகளில் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம்.உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைக்கின்ற எல்லோருக்கும் சிறந்த உணவு இதுவாகும். முளைகட்டிய பயறுகளில் கலோரி குறைவு என்பதுடன், அவை பசியையும் கட்டுக்குள் வைக்கும்.

உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் போன்றோருக்கு நார்ச்சத்து மிகுந்த உணவுகள் தான் அவசியத் தேவை. அதேபோல மலச்சிக்கலை எதிர்கொள்ளும் நபர்களுக்கும் நார்ச்சத்து உணவு தேவை. ஆக, நல்ல தேர்வாக முளை கட்டிய பயறுகள் அமையும். இது செரிமானத்தை தாமதமாக்குவதால், அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற ஆசை மட்டுப்

படுத்தப்படுகிறது.

உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை பலப்படுத்த நினைப்பவர்கள், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் முளை கட்டிய பயறுகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள குளோரோபில் என்னும் சத்து நம் செல்களில் உள்ள கழிவுகளை கூட வெளியேற்றிவிடும்.

தொகுப்பு : ரிஷி

Related Stories: