கோடைகால குழந்தைகள் பராமரிப்பு!

நன்றி குங்குமம் டாக்டர்

பருவ மாற்றங்கள் உண்டாகும் போதெல்லாம் அந்தந்த காலநிலைக்கு ஏற்ப பல்வேறு நோய்களும் உண்டாவது இயல்பு. அந்தவகையில், தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டது. எனவே, கோடையில் உண்டாகும் நோய்களில் இருந்து வளரும் குழந்தைகளை தற்காத்துக்கொள்வது அவசியமாகும். கோடையில் பச்சிளம் குழந்தைகள் முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்கள் என்னென்ன? அவை ஏற்படாமல் எப்படி தடுக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

கோடையில் குழந்தைகளை பாதிக்கும் நோய்கள்

கோடைகாலத்தில் வெயில் அதிகரிப்பால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவது இயல்பு. பெரியவர்களுக்குதான் இந்த நீரிழப்பு உண்டாகும் என்று நினைக்க வேண்டாம். இதற்கு குழந்தைகளும் விதிவிலக்கு அல்ல. அவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், சிறுவர்கள் இயல்பாகவே போதுமான தண்ணீர் குடிப்பதில்லை. இந்நிலையில் உடலில் நீரிழப்பு என்பது அதிகமாகவே இருக்கும். அதோடு வெயிலில் விளையாடுவதால் வியர்வையும் அதிகமாக இருக்கும்.

எனவே, குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் இருந்தால் அவர்களுக்கு நீர்ச்சத்து பற்றாக்குறை என்பதை தெரிந்துகொண்டு இயன்றவரை குழந்தைகளுக்கு போதுமான அளவு நீர் குடிக்க கொடுக்க வேண்டும்.குழந்தைகள் மெல்லிய சருமம் கொண்டவர்கள் என்பதால் வெயில் காலத்தில் மிலிரியா எனப்படும் வியர்க்குரு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உண்டு. மேலும், வெப்ப கொப்புளங்களும் உண்டாகலாம். குறிப்பாக மண்ணில் விளையாடும் குழந்தைகள் வியர்வையோடு மண்ணும் சருமத்தில் ஒட்டிக்கொள்ளும் போது அவை கொப்புளங்களை ஊக்குவிக்க செய்யும். இந்நிலையில், உடலில் நீரிழப்பு ஏற்படுவதோடு அதிகப்படியான வெப்பம் இணைந்து சன்ஸ்ட்ரோக் தூண்டுகிறது.

இது மூளை செல்களை சேதப்படுத்தக்கூடியவை. ஆபத்து நிறைந்தவை. இது வயதானவர்களை அதிகம் தாக்கக் கூடியவை என்றாலும் குழந்தைகளும் இந்த பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். அதனால் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.பொதுவாக மழைக்காலங்களில்தான் நீரில் பரவும் நோய்கள் அதிகமாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் கோடை காலங்களிலும் காலரா, டைபாய்டு, மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்படலாம். இதனால், குழந்தைகளுக்கு திடீர் காய்ச்சல், தலைவலி, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, வலிப்புதாக்கங்கள், இதயத்துடிப்பு அதிகரித்தல் போன்றவையும் உண்டாகலாம்.

குழந்தைகளுக்கு உணவு வழியாகவும் ஆரோக்கியக் குறைபாடு உண்டாகலாம். இது உணவு நச்சு மற்றும் உணவுத் தொற்று காரணமாக உண்டாகிறது. இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல், வயிறு வலி போன்ற உபாதைகளை குழந்தைகளுக்கு உண்டாக்கிவிடும். எனவே, குழந்தைகளுக்கு கண்ட நேரத்தில் உணவு கொடுக்காமல் சரியான நேரத்தில் சரியான உணவை சுகாதாரமாக தயாரித்து கொடுக்க வேண்டும். மேலும், வெளி உணவுகள் உண்பதை முடிந்தளவு தவிர்க்கச் செய்வது நல்லது.

கோடையில் குழந்தைகளுக்கு வரக்கூடிய பொதுவான நோய்களில் சின்னம்மையும் உண்டு. இது உடல் முழுவதும் திரவம் நிறைந்த சிறிய கொப்புளங்களாக வரக்கூடும். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழந்தைகளை இது அதிகம் தாக்கச் செய்யலாம்.ஓடிடிஸ் எஸ்டர்னா என அழைக்கப்படும் வெளிப்புற காதுப்பகுதி வீக்கம் சில குழந்தைகளுக்கு உண்டாகலாம். இது பாக்டீரியா தொற்று மற்றும் காதுக்குள் இருக்கும் நீரினால் வலி உண்டாகி புண்ணாக மாறிவிடும். வெயில் காலங்களில் குளிக்கும் குழந்தைகளின் காதுகளை நன்றாக துடைக்காதபோது, இந்த தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

வெயிலின் கடுமை அதிகரிப்பதனால், வெயிலில் நீண்டநேரம் விளையாடும்போது, சில குழந்தைகளுக்கு வலிப்பு நோய் உண்டாகலாம். கோடைகாலத்தில் குழந்தைகளை தாக்கும் மற்றொரு நோய் ஒவ்வாமை நாசியழற்சி அல்லது மூக்குச்சளி நோய் ஆகும். இது தூசிகள் நிறைந்த இடத்தில் குழந்தைகள் விளையாடும்போது, மூக்கில் உள்ள சீமென்சவ்வில் அழற்சி ஏற்பட்டு மூக்கடைப்பு, நமைச்சல், எரிச்சல் ஆகியவை உண்டாகும். பின்பு மூக்கில் இருந்து நீர் சொட்டு சொட்டாக ஒழுகும்.

கோடைகாலத்தில் அதிகமான சூடு காரணமாக வியர்வைக் குழாய்கள் அடைக்கப்பட்டு தலை, கழுத்து, தோள்பட்டைகள் உள்ளிட்ட இடங்களில் சொறி மற்றும் சிவப்புக் கொப்புளங்கள் உண்டாகும். மேலும், குளோரின் மற்றும் சூரிய வெப்பத்தால் உடலின் தோல்பகுதியில் வறட்சி ஏற்பட்டு அழற்சி நோய் உண்டாகிறது. ஆங்கிலத்தில் அடோபிக் டெர்மடிடிஸ் என்றழைக்கப்படும் தோலழற்சி நோயினால் தோல் சிவப்பாக மாறும். இதனால் தோலில் வீக்கம் மற்றும் அரிப்பு உண்டாகும்.

தற்காத்துக்கொள்ளும் வழிகள்

பொதுவாக, கோடைகாலத்தில் குழந்தைகள் பெரும்பாலும் வெளியே சென்று விளையாடுவார்கள். அந்த நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால், குழந்தைகளை அதிகப்படியான வெயில் நேரத்தில் வெளியே விளையாட அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே அனுப்ப வேண்டாம். மதியம் வீட்டில் குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது, புத்தகங்களை படித்துக் காட்டுவது, பொம்மை செய்வது, பெயின்டிங் செய்வது போன்ற ஆர்வத்தை தூண்டக்கூடிய விஷயங்களை செய்யலாம்.

வெளியில் வெயில் சூடாக இருக்கும் போது, ​​குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளை அணிவிக்க வேண்டும். அவை மற்ற துணிகளை விட அதிக வியர்வையை உறிஞ்சும் தன்மைக் கொண்டது. அதுபோன்று குழந்தைகளுக்கு வெளிர் நிற ஆடைகளை அணிவிப்பதும் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும். மேலும், குழந்தைகளை முடிந்தவரை காற்றோட்டமான இடங்களில் வைத்திருக்க
வேண்டும்.

தினசரி காலை, மாலை இரு வேளையும் குழந்தைகளை குளிக்க வைக்க வேண்டும். அதிலும், குறிப்பாக வெளியே விளையாடச் செல்லும் குழந்தைகளுக்கு உடல் உஷ்ணம், சரும அலர்ஜி போன்றவை ஏற்படக்கூடும். எனவே அவர்கள் வீடு திரும்பியதும் குளிக்க வைப்பது அவசியமாகும்.

குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்

கோடையில் குழந்தைகள் சரும வறட்சி, அரிப்பு, வீக்கம் போன்ற பல்வேறு வகையான ஒவ்வாமைகளால் பாதிக்கப்பட்டால், அது நீரிழப்புக்கான அறிகுறிகளாகும். சிறுநீர் மிகக் குறைவாக கழித்தாலும், நீரிழப்பு காரணமாகும். இதுபோன்ற நேரத்தில், திரவ ஆகாரமான இளநீர், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சரியான இடைவெளியில் கொடுப்பதன் மூலம் நீரிழப்பு அபாயம் உண்டாகாமல் தடுக்கலாம்.

தினமும் காலையில் தேங்காய்த் தண்ணீர் கொடுக்கலாம். இதில் உள்ள பொட்டாசியம் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது.குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடிப்பது மிகவும் முக்கியம். சப்ஜா கலந்த தண்ணீர் கொடுப்பது நல்லது.ஒரு சிட்டிகை சீரகப்பொடி, உப்பு மற்றும் ஒரு சிட்டிகை எலுமிச்சைச் சாறு கலந்த நீர்த்த மோரை தினமும் மதிய உணவுக்குப் பிறகு கொடுத்தால், குழந்தைகளுக்கு நீரேற்றத்துடன் நல்ல செரிமானமும் கிடைக்கும். மோரில் கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் பொட்டாசியம் உள்ளது. இவை தலைவலி, குமட்டல் போன்ற பிரச்னைகளை போக்குகிறது.

வெயில் காலத்தில் குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது குடிப்பதற்காக தரமற்ற தண்ணீர் அல்லது குளிர்பானங்களை தரக்கூடாது. அவ்வாறு தருவதன்மூலம், காய்ச்சல், மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எனவே, சுத்தமான குடிநீரை காய்ச்சி, வடிகட்டி, ஆறவைத்து கொடுக்கவேண்டும்.குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 6 முறையாவது சிறுநீர் கழிக்கும் அளவிற்கு தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது குழந்தைகள் நல நிபுணர்களின் அறிவுரை ஆகும். காரமான உணவுகளை தவிர்த்தல், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தண்ணீர கொடுப்பதை தவிர்த்தல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், திராட்சை, அன்னாசி, தர்பூசணி, கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி வெள்ளரி, மாதுளை என பழ வகைகளையும், பழச்சாறுகளையும், இளநீர், நுங்கு போன்ற உடலுக்கு கேடு தராதவற்றை கொடுப்பதன் மூலம் கோடை வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும்.

கோடையில் மிளகாய், மசாலா மற்றும் இனிப்புகளை அதிகம் கொடுப்பதை தவிர்க்கவும். மிளகாய் மற்றும் மசாலா சாப்பிட்டால், சூடு அதிகமாகும் அபாயம் உள்ளது. மேலும், பீட்சா, பர்கர் மற்றும் டின்னில் அடைக்கப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. இவை அனைத்தும் தாகத்தை அதிகரிக்கும். பெரும்பாலான உணவுகள் வீட்டில் புதிதாக சமைக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.

கோடையில் சமைக்கப்படும் உணவுகள் விரைவில் கெட்டுவிடும் என்பதால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, வெளியே எடுத்த உடனே சாப்பிடுவோம். ஆனால் இவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. குழந்தைகள் குளிர்ந்த நீரைக் குடித்தால், சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது. பானைத் தண்ணீர் கொடுப்பது மிகவும் நல்லது.

குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது கவனிக்க வேண்டியவை குழந்தைகளை வெயிலில் வெளியே அழைத்துச் செல்ல நேர்ந்தால், கண்ணுக்கு கூலிங் கிளாஸ் அணிவித்து அழைத்துச் செல்ல வேண்டும். கூலிங் கிளாஸ் அணிவதால் சூரியக்கதிர்கள் நேரடியாக கண்களில் படாமல், கண்கள் பாதுகாப்பாக இருக்கும். அதுபோன்று, தலைக்குத் தொப்பி அணிவிப்பது நல்லது. நேரடியாக தலையில்சூரிய ஒளி விழுந்தால் தலைவலி, தலைசுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் குளிர்ந்த நீரில் கண்களைச் சுத்தம் செய்வது கட்டாயமாகும். அல்லது குளிக்க வைப்பது நல்லது.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post கோடைகால குழந்தைகள் பராமரிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: