நானும் நிஜம் இன்ட்ரோவெர்ட்தான்… என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய தேதியில் நானும் இன்ட்ரோவெர்ட்தான் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. இப்படியான சூழலில் யார் இன்ட்ரோவெர்ட் அதற்கான உண்மையான வரையறை என்ன? சமூகத்தோடு இணங்கிப் பழக வேண்டிய தேவை என்ன என்பன குறித்தெல்லாம் கடந்த இதழில் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் பகிர்ந்ததின் தொடர்ச்சி இது…

கால காலமாக கடைபிடிக்கப்பட்டுவரும் பாலியல் அடையாளம் சார்ந்த பண்பு வரையறைகள் ஜீன்களில் பதியப்பட்டு வந்துள்ளன. ஆண் என்பவன் குறைவாகப் பேசுவான். உறவுகளில் வெளிப்படையாக நெருக்கம் (Intimacy) காட்ட மாட்டான். வெளியே சென்று அறிவு/உடல்சார் உழைப்பில் மட்டுமே ஈடுபடுவான் என்ற பால் வகை மாதிரி (Gender Sterotype) காரணி இங்கே பேசப்பட வேண்டியதாகின்றது.

அதே போல் பெண்ணுக்கென்றும் சமூகம் தீர்மானித்துள்ள பண்புகளையொட்டியும் பெரும்பாலானோர் தம் ஆளுமைப் பண்புகளைக் (Personality Traits) கட்டமைத்துக் கொள்கிறார்கள். எனவே, இன்றைய சமூகத்தில் பக்கத்து வீட்டு நபர்களோடும், உறவினர்களோடும் பேசக்கூட தயங்கக்கூடிய இளைஞர்களை நாம் அதிகம் காண்கிறோம். சில இடங்களில் எவரிடமும் பேசாமல் ஒதுங்கியிருந்து, தனிமை விரும்பிகளாக தம்மைக் காட்டி, திடீரென சமூகத்துக்கு எதிரான சில செயல்களை செய்துவிட்டு, வழக்கம் போல எல்லோரிடமும் பேசி மறைந்து விடுவதை செய்திகளில் அறிகிறோம்.

உறவுகளை ஏமாற்றுபவர்கள் (Relationship Cheaters) Poligamy எனும் பல்லுறவு விழைவு கொண்டவர்கள் மற்றவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாற்றுவது, ஒரே நேரத்தில் பலருடைய உணர்வுகளோடு விளையாடுவது, manipulation (உண்மைகளைத் திரித்தல் ) போன்றவற்றைச் செய்வதன் வாயிலாகக் குரூரமான திருப்தியை அடைகிறார்கள் என்று ஒரு அதிர்ச்சிகரமான புள்ளிவிவரம் சொல்கிறது.

சமூக வலைத்தளங்களில் புதிர்மையானவர்களாகவும் (Mystic) எனும் மாயஈர்ப்பு கொண்டவர்களாகவும் பிறர் அணுகுவதற்கு சற்று கடினமானவர்களாகவும் காட்டிக்கொள்வதன் மூலம் இவர்கள் அன்பை பெறுவது ஒரு சுவாரஸ்யமான இலக்கு என்று பிறரை கருதச் செய்கிறார்கள். இதற்கு, இன்ட்ரோவெர்ட் என்ற ஒரு சொல்லை ஆயுதமாக்கிக் கொள்கிறார்கள். நவீன யுகத்தில் Physical Abuse எனும் உடல் துன்புறுத்துதல்களை விடவும், மனரீதியான உணர்வு பாதிப்பு (Mental /Emotional abuse) செய்பவர்கள் சற்றும் தயங்காமல் இன்ட்ரோவெர்ட் முகமூடியை அணிந்து கொள்கிறார்கள்.

உண்மையில் இன்ட்ரோவெர்ட்டுகள்

தங்களுக்கான மனிதர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அதிக நண்பர்கள் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள். எனினும் நெருக்கமான உரையாடல்களை விரும்புவார்கள். ஆனால், எவருமே வேண்டாம் எனும் சமூகத்திற்கு எதிரானதன்மையையும், ,அதீதக் கூச்ச சுபாவத்தையும் பலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். மேலும், நீ என்னுடைய உணர்வை மதிக்கவில்லை, உறவைப் புறக்கணித்து விட்டாய், சரியாக பதில் கூறவில்லை, வீட்டிற்கு வந்த மனிதர்களோடு முகம்கொடுத்துப் பேசுவதில்லை, உதவி என்று கேட்டால் கடைக்குச் செல்வதில்லை போன்ற அன்றாட வாழ்வின் குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது பிறர் அடுக்கும்பொழுதும் அவர்கள் அதை தன்னுடைய சுதந்திரம் என்று கூறிக் கொள்வது தவறான போக்கு என்கிறது உளவியல்.

வேறு சிலர் திட்டமிட்டு இன்னாருடன் பேசுவதால் பயன் இருக்கிறது, அவரிடம் ஒரு வேலை ஆக வேண்டியுள்ளது என்று சந்தர்ப்பவாத சுயநலத்தோடு பழகுவதையும் இன்ட்ரோவெர்ட்தன்மை என்று கூறிக் கொள்கிறார்கள். உண்மையான இன்ட்ரோவெர்ட்டுகள் சமூகத்தோடு இணக்கமாக இருக்கக்கூடியவர்கள். அவர்களுடைய உளவியல், உடலியல் சார்ந்து பார்த்தால் டோபாமைன் (Dopomine) எனும் உணர்வுச் சுரப்பியின் நெகிழ்தன்மை அடிக்கடி மாறுபடுகிறது. எனவே பெரும் கூட்டத்தில் அதிகமாகும் பேச்சுக்களும், கருத்துக்குவிப்புகளும் அவர்களுக்குச் சுமையாகிறது. அவர்களுடைய உயிர் உந்துசக்தி நிலை (Energy level) வெகுவாகக் குறைகிறது.

இன்றைய சூழலில் இதுகுறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியமாகிறது. தவறான நபர்களிடம் சிக்கி ஏமாறற்றம் அடைவதை தவிர்ப்பதில் கவனம் கொள்வது இருபாலினத்தாருக்கும் அவசியமானது. ஏனென்றால், உறவுகள் சார்ந்த பல சிக்கல்களில் ஆளுமை பண்புகளான இன்ட்ரோவெர்ட், எக்ஸ்ட்ரோவெர்ட் தன்மைகளின் பங்கு கூடுதலானது.போலி உள்முகச் சிந்தனையாளர்களை (Fake Introvert) இனம் காண சில குறிப்புக்களுண்டு. இயற்கை எழிலான இடத்திற்குச் செல்லும்பொழுது அவர்கள் அவற்றையெல்லாம் கவனிக்காமல் இதிலென்ன ஆச்சரியம் இதில் ரசிக்க ஒன்றுமில்லை என்பார்கள். வீட்டிற்கு எப்பொழுது செல்வோம் என்று அந்த நிகழ் கணத்தில் நிலையாக இருக்க மாட்டார்கள். மேலும் இன்ட்ரோவெர்ட் எனும் சிலர் தம்மை பெருமைப்படுத்திக் கூறத் துவங்கினாலும் அது பொய் எனலாம்.

தான் என்ற Ego நிலையில் நிறைவாக இருக்கிறோம் என்பதும் இன்ட்ரோவெர்ட் பண்புதான். ஆனால் அதனை அறியாததால் பெரும்பாலும் ஒப்புக்கொள்வது இல்லை என்கிறது உளவியல். இளைஞர்கள் பலரும் மகிழ்ச்சிக்காக கேளிக்கைகளில் மிக எளிதாகக் கலந்து கொண்டு பொழுதைக் கழிக்கிறார்கள். இவர்கள் தங்களை இன்ட்ரோவெர்ட் எனும்போது போலிகள் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். தங்களின் சோம்பேறித்தன்மையை, பொறுப்பின்மையை மறைப்பதற்காகவும் இன்ட்ரோவெர்ட் சொல் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் எங்களைத் தீர்ப்பிடுகிறீர்கள் (judgemental) என்று உண்மையான இன்ட்ரோவெர்ட்டுகள் கோபம் கொள்ளக்கூடாது.

அப்படித் தீர்மானிப்பதற்கான அறிகுறிகளை முகாந்திரங்களை தான் வழங்கியிருக்கிறோம் என்பதை யோசிக்க ஆரம்பித்தாலே இத்தகு குழப்பங்களைச் சமன் செய்யலாம் உளவியலாளர் டாக்டர்.வில்லியம் இர்வின் தன்னுடைய ஒரு கட்டுரையில் Agrophibia எனும் உயரங்கள் மீதான பயம் கொண்ட சிலரும் தங்களை இன்ட்ரோவெர்ட் என்று கூறி கொள்வதாகக் குறிப்பிடுகிறார். மேலும் அவர் இன்ட்ரோவெர்ட்டுகள் பயந்தவர்கள் அல்ல.

மிகவும் தன்னம்பிக்கையானவர்கள். பயந்தாங்கொள்ளிகள் சிலர் தங்களை இன்டட்ரோவெர்ட் என்பார்கள் என்று சொல்கிறார்.ஒரு விமான நிலையச் சூழலை சார்ந்து காதுகளில் பஞ்சு அல்லது headphone ஒலிவாங்கி மாட்டிக்கொண்டு மற்றவர்களின் பேச்சுகளைத் தவிர்த்து, ஒரு ஜன்னலருகே ஒதுங்கியுள்ள, உள்வயச் சிந்தையை காட்சிப்படுத்துகிறார். அவர்கள் மனிதர்களை வெறுப்பவர்களில்லை. தனிமை விரும்பிகள். இருப்பினும் அடிக்கடி பிறருடைய தவறான புரிதலுக்கு ஆளாகும்போது இருதரப்புமாக மனநல ஆலோசனை செய்ய வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என வலியுறுத்துகிறார்.

இக்கட்டுரையில் யார் இன்ட்ரோவெர்ட்டுகள் யார் போலி இன்ட்ரோவெர்ட்டுகள் என்று சில காரணிகளைப் பகிர்ந்தோம். முறையான உளவியல் பரிசோதனையினால் மட்டுமே உறுதியாக ஒருவர் இன்ட்ரோவெர்ட் என்று அறிய முடியும். அப்படியான சோதனைகளிலும்கூட பொய்யான தகவல்களை வேண்டுமென்றே திசை திருப்ப சிலர் கூறிவிடக் கூடும். அந்த நிலைகளில் அடுத்த கட்ட உயர்மட்ட சிகிச்சைகளும், சீராக்க நுட்பங்களும் உளவியல் வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படும். எனவே இது ஒரு மானுடவியல் தொடர்புள்ள உளவியல் சிக்கல்.தீர்வு என்பதை விடவும், எப்படிச் சமன் செய்து (Balancing ) கொள்வது என்பதை எல்லோரும் வெளிப்படையாகப் பேச முன்வரவேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

இதைப் போலவே, போலி எக்ஸ்ட்ரோவெட் (Fake Extrovert) சிலரும் அடிப்படை குணநலன் சமநிலை பாதிக்கப்பட்டு அதிக கவன ஈர்ப்புக் கோளாறு (attention seeking disorder), அதீத பிறர்சார்புநிலை (Dependant) என்று உளவியல் கலந்துரையாடல், சிகிச்சை மூலம் கட்டுக்குள் வைக்க வேண்டியவற்றை மறைத்துக் கொள்கிறார்கள் இவ்விரு ஆளுமைப் பண்புகளுமே விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய கருத்தியல்.

எனவே, தம்மைத்தாமே மதிப்பீடு செய்து கொள்ள முன் வருவது, தம் சொற்கள், செயல்களின் விளைவுகள் அறிந்து, அவற்றிற்கு முழுப் பொறுப்பேற்று மாற்றம் நோக்கி நகர்வது மிக அவசியம்.தனது எந்தப் பண்பின் தாக்கம் தன் முன்னேற்றத்தை, அந்தரங்க உறவினை, குடும்பத்தாரை, சக மனிதனைப் பாதிக்கிறது என அறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

The post நானும் நிஜம் இன்ட்ரோவெர்ட்தான்… என்ன? appeared first on Dinakaran.

Related Stories: