ங போல் வளை-யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

காலமும் கருவியும்

திரைப்படங்களில் சோகப்பாடல்களுக்கு என ஒரு தேய்வழக்கு உண்டு. அந்த மாதிரி பாடல்களில் மழைக்காலத்தில் உப்பு விற்கப்போனேன், கோடை காலத்தில் குளிருக்கு ஏங்கினேன், குளிர் காலத்தில் சூடான வெயிலுக்கு காத்திருந்தேன் எனக் காலத்தை மையமாக வைத்து கதாநாயகனோ, நாயகியோ புலம்பும் பாடல்கள் ஏராளம். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் காலம் தாழ்த்தியோ தவறான காலத்திலோ சிலவற்றை செய்யும்பொழுது துன்பமே எஞ்சுகிறது அல்லது அச்செயல் முழுமையான பலனை அளிப்பதில்லை.

இந்தியக் கல்வி முறைகள் அனைத்திலும் இந்த ‘காலம் கருதிச் செயல்’ என்பது முக்கியமாக முன்வைக்கப்படுவதை கவனிக்கலாம். அதே வேளையில் காலத்துடன் மேலும் சிலவற்றை இணைத்துப் புரிந்துகொண்டனர். அதை கால தேச வர்த்தமானம் கருதிச் செய்தல் எனக்கூறினார். ஆகவே ஆயுர்வேதம் காலத்தை ஆறு நிலைகளாகப் பகுத்தது, மேற்கில் நான்கு பருவநிலைகள் பேசப்படுகிறது. ஆயுர்வேதத்தின்படி ஒரு வருடத்தில் ஆறு வெவ்வேறு பருவங்கள் நிகழ்கின்றன.

அவை வாடை காலம், வசந்த காலம், கோடை காலம், மழைக்காலம், இலையுதிர்காலம், பனிக்காலம் என்றும் அப்படி மாறிவரும் பருவங்கள் மனித உடலில் குறிப்பிடத்
தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அவற்றை ஆரோக்யத்துடன் நிர்வகிக்கவே, ரிது {பருவம் ]சரியா {அட்டவணை} என்றும் முறையை வகுத்தது. இப்படி காலத்தையும் நாம் வாழும் நிலத்தையும் அதாவது தேசத்தையும், கருதியே ஒவ்வொருவருக்குமான தீர்வை வழங்கியது.

இந்த ஆயுர்வேதத் தத்துவத்தை அடிப்படையாக கொண்டே யோக சம்ஹிதைகள், அதாவது தொகுப்பு நூல்கள் பலவகையான பயிற்சி திட்டங்களை முறைமைப்படுத்தின. உதாரணமாக, ஹட யோக பிரதீபிகை எனும் 16ம் நூற்றாண்டின் நூலில் அதன் ஆசிரியர் சுவாமி ஸ்வாத்மாராமா, நான்கு அத்தியாயங்களிலும் இந்த கருதுகோளை மையமாக வைத்தே பயிற்சிகள் அவற்றை செய்யத்தகுந்த காலங்கள், தவிர்க்கவேண்டியவை போன்ற பல கூறுகளைப் பேசுகிறார்.

உதாரணமாக, சிலர் யோகப் பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு சில வருடங்கள் மட்டும் செய்துவிட்டு, பக்கவிளைவுகள் ஏற்பட்டு, பயிற்சிகளை நிறுத்திவிடுவதுண்டு. பத்து பதினைந்து வருடங்களாக தொடர்ந்து பயிற்சிகளை இயந்திரத்தனமாகச் செய்துகொண்டிருத்தல், அதன் மூலம் உயிர்விசையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல், ஒரே இடத்தில் தேங்கி இருத்தல், இந்த இரண்டு சாத்தியங்களும் உள்ளன. இரண்டுமே சாதகனுக்கு நிகழக்கூடிய தாமச நிலை என்கிறது மரபு. இந்தத் தேக்க நிலைக்கு காரணம் காலமறிந்து கருவிகளை உபயோகிக்க இயலாமை அல்லது காலத்திற்கான சரியான கருவியின்மை.

சுஸ்ருதர் தனது சம்ஹிதையில் ‘நம் சுகத்தையும், துக்கத்தையும் அறிந்துகொள்ள எது காரணமோ அது காலம்’ என்கிறார். மேலும் ‘ ஸ்வஸ்த விருத்தம் எனும் தனி அத்தியாயமே எழுதி இருக்கிறார். ஸ்வஸ்தம் என்றால் ஆரோக்யம் விருத்தம் என்றால் பேணுதல்.அந்த கருத்துகளைத்தான் யோக நூல்கள் மேலும் விரித்து, காலதேச வர்த்தமானப் பயிற்சிகள் என வகைப்படுத்துகின்றன.
கோடையின் வெப்பத்தின்போது வாத தோஷம் ஆதிக்கம் செலுத்துகிறது, குளிர் காலத்தில் கபதோஷமும், மழைக் காலத்தில் பித்தமும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆகவே, உணவிலும் வாழ்வியல் முறையிலும் செய்ய வேண்டிய மாற்றங்களை ரிது சரியை என அட்டவணை படுத்தினர்.

அதையொட்டி, பயிற்சிகளை வடிவமைத்தது யோகம். இளவேனிற் காலத்தை தீவிரமான யோக சாதனா காலமாக வடிவமைத்தது யோக மரபு.கார் காலத்தில் மூன்று தோஷங்களும் சீற்றமடைவதால், உடலின் சூட்டை தக்கவைக்கக்கூடிய பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.குளிர்காலத்திற்கான ஆசனங்களும், பயிற்சிகளும் வேறுவிதமாக இருக்க வேண்டும்.

ஆகவே, இவற்றை வடிவமைத்த குருமார்கள், ஹடயோகம் என்பது, ஆசனங்கள், பிராணாயாமம் , முத்ரைகள் , பந்த எனும் நான்கு நிலைகளின் கலவையாக இருத்தல் அவசியம் என்றனர். கடுமையான ஆசனப் பயிற்சிகளை ஒருவர் கோடைகாலத்தில் செய்யும் போது உடலின் தாதுக்கள் முக்கியமாக, ரச மற்றும் ரக்த தாதுக்கள் பாதிக்கப்படுகின்றன. அவர் ஆற்றலை விரயம் செய்கிறார் என்றே பொருள். அந்தக் காலகட்டத்தில் ஒருவர் உடலின் நீர்த்தன்மையை சேமித்துக்கொள்ள வேண்டியுள்ளது.

ஆகவே தனக்கு ஆசனங்கள் மிகவும் பிடிக்கும் என்பதால் அதீதமாக பயிற்சிகளைச் செய்யக்கூடாது. அதே வேளையில் பயிற்சிகளை நிறுத்திவிடவும் கூடாது என்பதால், மேலே சொன்ன நான்குவிதப் பயிற்சிகளில் முத்திரைகள் மற்றும் பிராணாயாமப் பயிற்சிகளுடன், தனிப்பட்ட தியானப் பயிற்சிகளும் அவசியமாக இருக்க வேண்டும்.குளிர்காலத்தில் ஜடராக்னியைப் பேணுதல் இன்றியமையாததாக வகுத்துள்ளனர். வயிற்றுப் பகுதியில் இருக்கும் இந்த அக்னி ஜீரண மண்டலம் மற்றும் சுத்திகரிப்பு மண்டலம் எனும் இரண்டிற்கும் ஆதாரமாகிறது. இந்த அக்னியின் செயல்பாடு குறையும் பட்சத்தில், உடலிலும் மனதிலும் மந்த நிலை கூடி, செயல்கள் முழுவதும் தேங்கிவிடுகின்றன.

தேங்கிய நிலை என்பது நோய்களை வரவழைக்கும் என்பதால், இந்த காலகட்டத்தில் ‘அக்னித்தன்மையை ‘ மையமாக வைத்து செய்யப்படும் பயிற்சிகளை ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிலும், படுத்த நிலையில் செய்யப்படும் ஆசனங்களில் சிலவற்றை மட்டுமே செய்ய வேண்டும், பிராணாயாம பயிற்சிகளை ஆசிரியரின் துணையுடன், நீண்ட சுவாசம் கொண்ட பயிற்சிகளாகவோ அல்லது மூச்சை உள்ளேயோ வெளியேயோ நிறுத்தி வைத்து செய்யக்கூடிய பயிற்சிகளாகவோ செய்ய வேண்டும், அத்துடன் சரியான ஓய்வும், சமநிலையும் கொடுக்கக்கூடிய தியான முறைகளை ஒருவர் செய்யவேண்டும்.

மழைக்காலங்களில் செய்யும் பயிற்சிகளைத் திறந்தவெளியில் செய்வதைத் தவிர்த்து, ‘மேலே சொன்னது போல அக்னித்தன்மையை சீராக்கக் கூடிய, பயிற்சிகளாகவும் செய்வது மிகவும் அவசியமானது. அதே வேளையில் பிராணாயாம பயிற்சிகளை குறைத்துக்கொண்டு, முத்ரா, பந்த போன்ற பயிற்சித் திட்டங்களில் கவனம் செலுத்தலாம். இது பொதுவாகவே அதிக உறக்கம் தேவைப்படும் காலம் என்பதால், தூக்கத்தை குறைத்து, ஆழ்ந்த தியான முறைகளை தேர்ந்தெடுக்கலாம், இப்படியாக கால,தேசத்தை நாம் கணக்கில்கொண்டால், இந்தியா போன்ற சீதோஷண நிலையில் வாழ்பவர்கள், நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை தீவிரமான ஆசன பயிற்சிகளிலும் மற்ற காலங்களில் மிதமான ஆசனப் பயிற்சிகளிலும் தீவிரமான மாற்று பயிற்சிகளிலும் ஈடுபடுதல் அவசியமாகிறது.

நாம் வைத்திருக்கும் பயிற்சிகளுக்கான பாடத்திட்டம் சரியானது தானா? என்பதை நீங்களே கண்டுகொள்ள முடியும்.உதாரணமாக, ஒவ்வொரு பருவத்திலும் வரக்கூடிய பொதுவான உடல் மற்றும் உள்ளத்தின் நோய்களைத் தெரிந்து கொண்டு, அவ்வகை நோய்க்கூறுகள், உங்களுடைய பயிற்சிகளின் மூலமாக மூன்று வருடத்தில் முற்றிலுமாக சரிசெய்யப்பட்டு, அந்தந்த பருவத்தில் வரக்கூடிய உபாதைகள் குறைந்துவிட்டது என்றால் நீங்கள் வைத்திருக்கும் பாடத்திட்டம் சரியானது என அர்த்தம். இல்லையெனில் உங்களுக்கு மாற்றுத் திட்டங்கள் தேவை என புரிந்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் கடந்த ஐந்து வருடங்களாக யோகம் அல்லது வேறு ஏதோ ஒருசில பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவருகிறீர்கள், இருந்தாலும் மழைக்காலம் வந்துவிட்டால், ஜலதோஷமும், சளியும், காய்ச்சலும், உடல் வலியும், தலைவலியும், வருடாவருடம் வருகிறது என்றால் நீங்கள் உங்களுக்குத் தேவையான சரியான பயிற்சிகளைச் செய்யவில்லை என்றே அர்த்தம்.  ஒரு யோகியின் உடல் ஒவ்வொரு பருவத்துக்கும் தக்கவாறு தன்னைச் சரியாக தகவமைக்கவல்லது. அது அவர் தேர்ந்தெடுக்கும் பயிற்சிகளால் கிடைத்த பலன்.ஆக அடுத்த முறை பருவ மாற்றத்தின் போது உங்களை நீங்களே சோதித்துப்பார்த்து சரியான ஆசிரியரிடம், உங்களுக்கான பயிற்சித் திட்டத்தை பெற்று, மூன்று வருடத்தில் முழுமையான ஆரோக்கியத்தை மீட்டுக்கொள்ளலாம்.

சர்பாசனம்

இந்தப் பகுதியில் நாம் ‘சர்பாசனம்’ எனும் பயிற்சியைக் காணலாம். தரையில் குப்புறப் படுத்த நிலையில் கை விரல்களைப் பின்புறமாகக் கோர்த்து, இறுதி நிலையில் தலை, கழுத்து, நெஞ்சுப் பகுதி மற்றும் கோர்த்த விரல்களை, மூச்சை உள்ளிழுத்தபடி மேல் நோக்கி உயர்த்தலாம். இறுதி நிலையில் சில நொடிகள் இருந்துவிட்டு உடலை தளத்திக்கொள்ளலாம். சுவாச மண்டலம் சார்ந்த பிரச்னை இருப்பவர்களுக்கு முக்கியமான பயிற்சி இது.

The post ங போல் வளை-யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.