கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-சமரசம் வேண்டாமே!

நன்றி குங்குமம் டாக்டர்

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

இன்று வெளி நோயாளிப் பிரிவில் இரண்டு இளைஞர்களை சந்தித்தேன். இருவருக்கும் கண்ணில் ஒரேவிதமான பிரச்சனை. ஆனால் இரண்டு பேரின் அணுகுமுறையும் வேறாக இருந்தது. முதலில் வந்த இளைஞனுக்கு 30 வயது இருக்கும். ‘எனக்கு சின்ன வயதிலேயே கண்ணாடி போடணும்னு சொன்னாங்க. ஆனா நான் போடலை.. இப்ப அடிக்கடி தலைவலி வருது. கடையில் மாத்திரை வாங்கி போடுறேன்’ என்றான் அவன். இரண்டாவது இளைஞன் இப்பொழுது தான் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறான். ‘எனக்கு சாயங்காலம் வீட்டுக்கு வரும் பொழுது தலை வலிக்குது. கூர்ந்து படிக்கிறப்ப அதிகமாக ஆகுது. கண் பார்வையில் குறைபாடு இருந்தால் கண்ணாடி போட்டுக்கலாம்னு இருக்கேன்’ என்றான்.

இருவரையும் பரிசோதித்ததில் இருவருக்குமே கண்ணாடி போட்டால் நிவர்த்தியாகி விடக் கூடிய கண்பார்வை குறைபாடு (refractive error) என்பது உறுதியானது. முதல் இளைஞன் ‘கண்ணாடி போடாமல் இருக்கிறதுக்கு ஏதாவது வழி இருக்கா?’ என்றே மீண்டும் மீண்டும் கேட்டான். காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தலாம் அல்லது லேசர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றேன். இல்லை, அதுவும் எனக்கு வேண்டாம் தைலம், மாத்திரை ஏதாவது? என்றான். ‘வாய்ப்பே இல்லை. உங்கள் உடல்நிலையை நீங்கள் இன்னும் சிக்கலாக்கிறீர்கள்’ என்று சொல்லி ஒருவாறாகக் கண்ணாடி அணிவதற்கு அவனை சம்மதிக்க வைத்தேன். புரிந்துகொண்டு இனி முறையாக அணியவும் வாய்ப்பு இருக்கிறது, அல்லது அந்தக் கண்ணாடி பத்திரமாக டப்பாவில் தூங்கவும் வாய்ப்பிருக்கிறது.

இரண்டாவது இளைஞனுக்கு மிகக் குறைந்த அளவில் தான் பார்வைக் குறைபாடு இருந்தது. ‘‘இருந்தாலும் படிக்கிறப்ப தலைவலி வருதுல்ல.. கண்டிப்பா கண்ணாடி போட்டுக்குவேன்” என்றான். ஒரு மாசம் கண்ணாடி போட்டா போதுமா? என்னுடைய பிரச்சனை தீர்ந்திடுமா? என்பது பலரின் கேள்வி. முன்னால தலை வலிக்காக ப்ளைன் க்ளாஸ் போட்டேன், எனக்கு பவர் எல்லாம் இல்லை என்பது வேறு சிலரின் வாதம். கண்ணாடியெல்லாம் ஏமாற்று வேலை.

எக்சர்சைஸ் பண்ணா சரியாக்கிடலாம்னு சொன்னாங்களே என்பது இன்னொரு சாராரின் கேள்வி. இந்த மூன்றுமே மிகத் தவறான வாதங்கள். பார்வை குறைபாடு ஒன்றும் பெரிய நோய் இல்லை. அதை ஒரு நிலை (condition) என்று சொல்லலாம். மூக்கினை இரண்டு பாகங்களாகப் பிரிக்கும் உள்ள தண்டுவடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உலகில் 15-20 சதவீதம் பேருக்கு மட்டும் தான் அந்தத் தண்டு நடுக்கோட்டில்  இருக்கும். மீதம் உள்ள 80-85 சதவீதம் பேரிலும் ஒன்று இடது புறமாக வளைந்திருக்கும், அல்லது வலது புறமாக வளைந்திருக்கும். இது இயற்கையில் கரு உருவாகையில் நடக்கக்கூடிய சாதாரணமான ஒரு மாற்றம்.

இதைப் போலத்தான் கண்களின் அமைப்பும். உலகில் 30 சதவீதம் பேருக்கு கண்ணின் அமைப்பில் மாற்றம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகம் எங்கிலும் சுமார் 10 கோடி பேர் சரி செய்யப்படாத பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் பலர் தன்னால் இன்னும் தெளிவாக பார்க்க முடியும் என்பதையே அறியாதவர்களாக இருக்கிறார்கள். கண்ணின் நீளம், அகலம், கருவிழியின் அமைப்பு இவை எப்படி இருக்க வேண்டும் என்பது பரம்பரை ஜீன்கள் வாயிலாக கருவிலேயே முடிவு செய்யப்படும் ஒன்று. அதன் அடிப்படையிலேயே ஒருவருக்கு கண்ணாடி தேவையா இல்லையா என்ற முடிவு அமைந்திருக்கிறது.

பார்வைக் குறைபாடுகளில் முதலிடம் பிடிப்பது தூரப்பார்வைக் குறைபாடு (myopia). இவர்களுக்கு கண்ணின் முன்பின் அச்சு நீளம் (axial length) வழக்கத்தைவிட சற்றே அதிகமாக இருக்கும். அதை சரி செய்வதற்காக குழிவு வகை லென்ஸை பயன்படுத்தினால் சரியான பார்வையைப் பெற முடியும். கண் பந்தின் அச்சுநீளம் சற்றுக் குறைவாக இருந்தால் Hypermetropia பிரச்சனை வரும். அதற்கு ஏற்ற வகையில் குவிவு லென்சை அணிய வேண்டியதிருக்கும்.

 சிலருக்குக் கண்ணின் மேற்பரப்பின் வளைவுகளில் (curvature) மாறுபாடு இருக்கலாம். பலருக்கு இந்தக் குறைபாட்டு வகைகளில் இரண்டு வகைகள் இணைந்தும் (combined) இருக்கக்கூடும். உங்களுக்குப் பொருத்தமான கண்ணாடியை தீவிர பரிசோதனைக்கு பின் உங்கள் கண் மருத்துவர் பரிந்துரை செய்வார்.

‘கம்ப்யூட்டர் மூலம் கண் பரிசோதனை’ என்று பல கண்ணாடிக் கடைகளில் விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள். இதில் கம்ப்யூட்டர் எனப்படுவது ‘ஆட்டோ ரிஃப்ராக்டோமீட்டர்’ என்ற கருவியைக் குறிக்கிறது. இந்தக் கருவியால் ஓரளவுக்கு மனிதனின் பார்வை குறைபாட்டின் தன்மையைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் இதை மட்டுமே அடிப்படையாக வைத்து கண்ணாடி வாங்குவது தவறு.  முறையான பரிசோதனை தேவை.

உங்கள் தலைவலிக்குக் காரணம் பார்வைக் குறைபாடு என்றால் கண்ணாடி அணிந்தால் தலைவலி நிச்சயம் விலகிவிடும். ஆனால் எல்லாவிதத் தலைவலிக்கும் கண்ணாடி தீர்வல்ல. தலைவலிக்கு கண் பிரச்சனை தவிர வேறு பல காரணங்களும் இருக்கின்றன. தூக்கமின்மை, மன உளைச்சல், உயர் ரத்த அழுத்தம், சைனஸ் பிரச்சனை, மைக்ரேன் போன்ற காரணங்களில் ஒன்றால் உங்களுக்குத் தலையில் வலி ஏற்பட்டிருக்கிறது என்றால், அந்தக் காரணத்தைக் கண்டுபிடித்து சீர்செய்வதே சரியான சிகிச்சை.

மற்ற பிரச்சனை உள்ளவர்களுக்குக் கண்ணாடி பலனளிக்காது. அதே சமயம் இயற்கையின் மாறுபாட்டால் ஒருவருக்கு கண் அளவு வித்தியாசமாக இருக்க நேர்ந்தால், அவருக்கு நிச்சயம் கண்ணாடி தான் தேவைப்படுமே தவிர, சைனஸ் பிரச்சனைக்கு செய்யும் ஆவி பிடிப்பதையும், உயர் ரத்த அழுத்தத்திற்காகத் தரும் மாத்திரைகளை சாப்பிடுவதாலும் தலைவலி குணமாகாது. வலி நிவாரணி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தையே தரக்கூடும். அடுத்த நாள் மீண்டும் தலைவலி வரும் வாய்ப்பு அதிகம்.

இதற்கு மாற்றே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். கண்ணாடிக்கு பதிலாக காண்டாக்ட் லென்ஸ் அணியலாம். 22 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் லேசிக், ZYOPTIX, SMILE போன்ற லேசர் சிகிச்சைகளைச் செய்து கொள்ளலாம். இதனால் தூரப்பார்வை பிரச்சனை முழுவதுமாக சரி செய்யப்படும். 22 வயதில் லேசிக் செய்து கொண்ட நபர்களுக்கும் நாற்பது வயதை நெருங்கும் போது கிட்ட பார்வைக்காக Near vision glass நிச்சயம் தேவைப்படும். சிறுவயது முதலே கண்ணாடி அணியும் நபர்களுக்கு அறுபது வயதில் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தால், அப்போது கண்ணுக்குள் பொருத்தப்படும் லென்ஸ்களை ஏற்கனவே இருக்கும் தூரப்பார்வை, கிட்டப் பார்வை குறைபாட்டை சீர் செய்யும் வகையில் பொருத்த முடியும்.

1980களில் தூரப் பார்வைக் குறைபாடு உடையவர்கள் சுமார் 17 சதவீதம் என்றும் தற்சமயம் அது 30 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்றும் உலகளாவிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது அதிக அளவில் பரிசோதனை செய்வதனால் இருக்கலாம். அப்போதைய காலகட்டத்தை விட இப்போது தெளிவான பார்வைக்கான தேவை வெகுவாக அதிகரித்திருக்கிறது. பார்வைத் திறனில் சமரசம் செய்து கொண்டோம் என்றால், கல்வி வேலை வாய்ப்பு வாழ்க்கைத் தரம் இவற்றோடு  சாலைப் பாதுகாப்பிலும் சமரசம் செய்து கொள்கிறோம் என்று பொருள்.

இன்று வெளி நோயாளிப் பிரிவில் கடைசி நபராக ஒரு அரசு அதிகாரி வந்தார். பொறுப்பான பதவியில் இருப்பவர். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் கணினியை பயன்படுத்துவேன், இரண்டு மணி நேரம் வாசிப்பதும், கையெழுத்திடுவதும், எழுதுவதும் இருக்கும். தினமும் தலைவலி வருகிறது என்றார். இவருக்கு தூரப் பார்வைக் குறைபாடு, வெள்ளெழுத்து பிரச்சனை இரண்டும் இருந்தது. கண்ணாடி வாங்கி ஒரு வருடம் ஆயிற்று. அதை அவர் பயன்படுத்தவே இல்லை, புத்தம் புதிதாக வைத்திருந்தார்.

தினமும் தலை வலிக்குது என்றார். கண்ணாடியைப் போடாமல் எப்படி வேலை செய்வீர்கள் என்று கேட்டதற்கு என்னுடைய உதவியாளரை விட்டு முக்கியக் கடிதங்களை வாசிக்க வைத்து கையெழுத்துப் போடுவேன் என்றார். இவ்வளவு பொறுப்பான பதவியில் இருக்கிறீர்கள், உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் பணிக்காக நீங்கள் தினமும் கண்ணாடி அணிந்துதான் வேலை பார்க்க வேண்டும் என்று அவரையும் வற்புறுத்தியே அனுப்பி வைத்தேன்.

முந்தைய தலைமுறையை விட இன்றைய தலைமுறையில் மிகச் சிறிய பார்வை குறைபாடு தன் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்ற புரிதல் பலருக்கு இருக்கிறது. ஆனால் இன்னும் பலரின் மனதில் கண்ணாடி அணிவது அழகுக் குறைவு என்ற எண்ணம் இருக்கிறது. ஆரோக்கியத்தை விட அழகு முக்கியம் என்ற எண்ணமும் அவர்கள் மனதில் விதைக்கப்பட்டிருக்கிறது. ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் கண்ணாடி அணிவது என்று சொன்னாலே பதறுகிறார்கள்.

பெரும்பாலான மணப்பெண்கள் கண்ணாடி அணிய வேண்டியிருந்தால் அதைக் கழற்றி வைத்துவிட்டு, திருமணத்திற்கு வந்திருக்கும் உறவினர் யார் என்று தெரியாமல் செயற்கையாகப் புன்னகைக்கிறார்கள். அழகா, ஆரோக்கியமா எது முக்கியம் என்பதை நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். அதைவிட அழகு என்பது காண்பவர் கண்ணில் இருப்பது தான் என்பதையும் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் உரக்கச் சொல்ல வேண்டும்!

Related Stories: