தொண்டை வலி (Throat infection)

நன்றி குங்குமம் தோழி

கோவிட் தொற்று  சோதனையில் நெகடிவ் என்ற பின்னும், ஏராளமான மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகும் தொண்டை வலி நீங்கவில்லை என்ற புகாருடன் பல நோயாளிகள்  சமீபத்தில் என்னிடம் வருவதைப் பார்க்கிறேன். அவர்களின் தொண்டை வலிக்கு ஆயுர்வேத மருத்துவ முறைகளின் மூலம் சிறப்பான சில வைத்தியங்களை இக்கட்டுரையில் பார்க்கலாம்.முதலில் இந்த தொண்டை வலி மற்றும் கரகரப்பு ஏன் வருகிறது என்று பார்ப்போம்?பனி, குளிர், கோடை, மழைக்காலம் என்று எல்லா பருவகாலத்திலும் தொண்டைவலி இருந்து கொண்டே இருக்கிறது என்று சொல்பவர்கள் உண்டு. இது மற்ற எல்லா நோய்களையும் விட அதிகப்படியான எரிச்சலையும் அவஸ்தையையும் கொடுக்கக்கூடியது.

தண்ணீரை குடிக்கவே சிரமமாக இருக்கும்போது உணவை சாப்பிடுவதும், ஏன் பேசுவதுமே கூட பெரும் அவஸ்தையாகிவிடும். பெரியவர்களுக்கே இந்த நிலை என்றால், அடிக்கடி தொண்டையில் பிரச்சனைகளுடன் மருத்துவரிடம் செல்லும் வளரும் குழந்தைகளின் அவஸ்தை சற்று கடினமானதே..தொண்டை வலிக்கான முக்கிய காரணங்கள்

தொற்றுகள்:  ஜலதோஷம், காய்ச்சல், சளி, சின்னம்மை போன்ற வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் பொதுவாக தொண்டையை தாக்கி வலியை ஏற்படுத்தும்.வறண்ட காற்று:  இது நாசி, வாய் மற்றும் தொண்டை குழியிலிருந்து ஈரப்பதத்தை நீக்குகிறது, இதனால் தொண்டை உலர்ந்து வெடிப்புகள் உண்டாகி அதனால் வலி உண்டாகும்.

இது பொதுவாக பனிக்காலங்களில் ஏற்படும். சிகரெட், புகையிலை புகை, காற்று மாசுபாடு, ரசாயனங்கள் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள பிற பொருட்கள் தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்த வாய்ப்புண்டு. சத்தமாக பேசுவது, கத்துவது, நீண்ட நேரம் பாடுவது ஆகிய செயல்களால் கூட தொண்டையில் உள்ள குரல் நாண்கள் மற்றும் தசைகளில் அழற்சி ஏற்பட்டு தொண்டை வலி மற்றும் கரகரப்பு ஏற்படலாம். கழுத்தில் வெட்டு அல்லது காயம் கூட தொண்டை வலியை உண்டாக்கலாம்.

ஒவ்வாமை: மகரந்தம், புல் மற்றும் செல்லப் பிராணிகளின் முடி, பொடுகு போன்ற ஒவ்வாமைகள் காரணிகள்  தொண்டை வலி மற்றும் கரகரப்பை ஏற்படுத்தலாம். தொண்டை, நாக்கு அல்லது குரல் பெட்டியில் கட்டி, அல்லது நீர்க்கட்டி, தைராய்டு பிரச்சனைகள் கூட தொண்டை வலியை ஏற்படுத்தலாம். நீண்ட காலமாக தொண்டை வலி இருப்பது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD)   

சிலருக்கு தொடர்ந்து அசிடிட்டி எனப்படும் நெஞ்சு கரிப்பு பிரச்சனை இருந்தாலும் வயிற்றில் உள்ள அமிலங்கள் மேல்நோக்கி நகர்ந்து நெஞ்செரிச்சல் மற்றும் தொண்டையில் எரிச்சல், புண்களை உண்டாக்குவதோடு,  அதனால் வாயில் உள்ள கிருமிகளே அப்புண்களில் பாதிப்பை ஏற்படுத்தி தொண்டை வலி, தொண்டை அழற்சி ஆகியவற்றை ஏற்படுத்தலாம். சிலருக்கு குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த ஆகாரங்களை சாப்பிட்டாலே தொண்டை வலி மற்றும் தொண்டை கரகரப்பு ஏற்படும்.

இது எதனால் ஏற்படுகிறது என்றால், குளிர்ந்த நீர் மற்றும் உணவானது தொண்டையில் உள்ள எதிர்ப்பு சக்தியை உடைத்து அதனால் வாயில் உள்ள கிருமிகளே தொண்டையை பாதித்து நமக்கு தொண்டை வலி மற்றும் கரகரப்பை ஏற்படுத்தும், இதனாலேயே நமது நோய் எதிர்ப்பு சக்தியை நன்றாக பராமரித்துக் கொள்வது முக்கியமாகிறது.

தொண்டை கரகரப்பு அறிகுறிகள்

தொண்டை வலிக்கான அறிகுறிகள், காரணத்தைப் பொறுத்து மாறுபடலாம்.

 

பொதுவான அறிகுறிகள்

*விழுங்குவதில் சிரமம்

*தொண்டையில் வலி

*கரகரப்பான குரல்

*பேசும்போது வலி அதிகரிப்பு

*தாடை அல்லது கழுத்து பகுதியில் நிணநீர் வீக்கம்

*வீங்கிய டான்சில்ஸ்

*டான்சில்ஸில் சீழ் அல்லது வெள்ளைத் திட்டுகள்.

தொற்றுநோயால் ஏற்படும் தொண்டை புண் / அழற்சி, மற்ற பல்வேறு அறிகுறிகளைக் காட்டலாம், அவை:

*மூக்கு ஒழுகுதல்

*காய்ச்சல்

*தலைவலி, காது வலி

*இருமல், தும்மல், குமட்டல்

*சோர்வு, கண்களில் கண்ணீர். தொண்டைவலியின் ஆரம்ப நிலையில் பயன்படுத்த அற்புதமான மருந்துகள் நம் வீட்டிலேயே உண்டு என்பதால் நாம் மருந்துகள் பக்கம் போக வேண்டிய அவசியம் இல்லை.

*நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை பருகும் போது தொண்டையிலுள்ள கிருமிகளை அழிக்க அது பெரிதும் உதவும்.

*5 கிராம் கல் உப்பை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை என தொண்டையில் படும் படி கொப்பளிக்கலாம். இது தொண்டையில் வலியை ஏற்படுத்தும் பாக்டீரியாவை வெளியேற்றி அங்கு ஏற்படும் எரிச்சலையும் கட்டுப்படுத்துகிறது. தொற்றுகள் குறைந்து தொண்டையில் உள்ள சளி இளகி வெளியேறவும் உதவுகிறது.

*தொண்டை வலி, இருமல் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வளிக்கும் கிருமிநாசினியான மஞ்சளை சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் தொண்டையில் எரிச்சலும், வலியும் குறையத் தொடங்கும். தொண்டைக்கு இதமாக இருக்கும்.

*“தொண்டைக்கு மிகவும் உகந்தது” என்று சொல்லக்கூடிய அதிமதுரம் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் இரண்டிலுமே தொண்டை பிரச்சனைகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்படும் மூலிகை. அதிமதுர டீ குடிப்பதன் மூலம் தொண்டை கரகரப்பை முற்றிலுமாக நீக்கலாம்.

*100 மில்லி வெந்நீரில் எலுமிச்சையை பிழிந்து தேன் கலந்து இளஞ்சூடாக தொண்டையில் படும்படி நிதானமாக தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை தொடர்ந்து மூன்று நாட்கள் விழுங்க நல்ல பலன் கிடைக்கும். இனிப்புக்கு மாற்றாக உப்பும் சேர்க்கலாம். எலுமிச்சை வைட்டமின் ‘சி’ நிறைந்தது என்பதோடு, ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது என்பதால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

*இஞ்சியைத் தோல் சீவி நறுக்கி 200 மில்லி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100மில்லியாக வற்றியதும் ஒரு எலுமிச்சைச்சாறு, 5 மில்லி தேன் சேர்த்து தினமும் சிறிது சிறிதாக விழுங்கி வர தொண்டை அழற்சி மற்றும் வலி நீங்கும். தேனில் இருக்கும் இயற்கையான ஆன்டிபயாடிக் மற்றும் ஹைபர்டோனிக் ஆஸ்மோடிக் தன்மை, அழற்சி ஏற்பட்டுள்ள திசுக்களில் உள்ள அடர்த்தியான சளியையும் வெளியேற்றி விடும். மேலும் தொண்டை புண்களை படிப்படியாக ஆற்றி விடும்.

*மருந்துக்கடைகளில் கிடைக்கும் அநேக இருமல் சிரப்புகளில் நாம் பார்ப்பது துளசியின் படம் தான். துளசி ஒரு சிறந்த ஆன்டிவைரல் மற்றும் நோய் ஆற்றலை அதிகரிக்கக்கூடிய  மூலிகை. இது இருமல், சளி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 4-5 துளசி இலைகளை சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேன், இஞ்சி சேர்த்து குடிக்கவும்.

 

*தொண்டை பிரச்சனைகள் ஏற்பட்டால், புதினா இலைகள் மற்றும் ஓம விதைகளுடன் நீராவியை உள்ளிழுக்கும் பயிற்சியை அடிக்கடி செய்யலாம்.

*இருமல் அல்லது தொண்டை எரிச்சல் ஏற்பட்டால், கிராம்பு பொடியை வெல்லம் அல்லது தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிடலாம்.

தொண்டை வலிக்கு ஆயுர்வேத சிகிச்சை

மேற்கூறிய வீட்டு வைத்தியமுறைகள் தொண்டைவலியை 3-4 நாட்களில் குணப்படுத்தவில்லையென்றால் நாம் தகுதிவாய்ந்த மருத்துவரை அணுகுவது சிறந்தது. மேலே கூறிய காரணங்கள் நமது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறது. தொற்றுநோய்க்கு மத்தியில், தொண்டை வலியிலிருந்து மீள்வது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமாக இருக்க உதவும் சில வழிமுறைகளை நம் வாழ்வில் இணைத்துக்கொள்வது மிகவும் முக்கியமாகிறது.

ஆயுர்வேத மருத்துவ முறையானது நோய் தொற்றை மட்டும் குணப்படுத்தாமல் நமது நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துவதால் வலி மற்றும் கரகரப்பு மட்டும் நீங்காமல் மறுபடியும் அடிக்கடி அந்நோய் வராமலும் பாதுகாக்க உதவுகிறது. தொண்டை வலிக்கான ஆயுர்வேத சிகிச்சைகள் - (கவலம் மற்றும் கண்டூஷம்), பேஸ்ட் பயன்பாடுகள் (பிரதிசரணம்), நீராவி உள்ளிழுத்தல் மற்றும் வாயிலடக்கும் மருந்துகள்.

வாய் கொப்பளிப்பது (கண்டூஷம் / கவளம்) - மூலிகை எண்ணெய், குடிநீர் அல்லது திரவத்துடன் வாய் கொப்பளிக்க அதில் பயன்படுத்தப்படும் மருந்தின் பண்புகளைப் பொறுத்து சிவத்தல், வீக்கம், நாற்றம், அரிப்பு, வறட்சி போன்றவற்றைக் குறைக்க உதவும். பொதுவாக இங்கு திரிபலை கஷாயம், கடுக்காய் கஷாயம், சப்தசாதாதி கஷாயம், அரிமேதாதி தைலம்  ஆகியவை  பயன்படுத்தப்படுகிறது.

பேஸ்ட் அப்ளிகேஷன் (பிரதிசரணம்)

கீழே உள்ள மூலிகைகளை பேஸ்டாக தயாரித்து வலி மற்றும் வீக்கத்தைப் போக்க பயன்படுத்தலாம்

* தண்ணீருடன் நெல்லிக்காய் தூள்

* தேனுடன் மஞ்சள்

* வேப்ப இலைகளை தேனுடன் அரைத்து.

* நெய்யுடன் இஞ்சி.

* தேன் கலந்த உப்பு

* அரக்கு தூள்

வாயில் அடக்கும் ஆயுர்வேத மருந்துகள்

* கதிராதி வடி

* வியோஷாதி வடி

* லவங்காதி வடி

* ஏலாதி வடி,

* தாளிசாதி சூரணம்,

* சீதோபலாதி சூரணம்

* அதிமதுர சூரணம்

பிற மருந்துகள்

* பிப்பளியாசவம்

* இந்துகாந்த கஷாயம்,

* தசமூல கஷாயம்,

* கண்டங்கத்திரி சூரணம்,

* தூதுவளை சூரணம்

ஆயுர்வேத காயகற்ப மருந்துகள்

* சியவனப்ராச லேகியம்

* பிப்பலி ரசாயனம்

* பார்கவ ரசாயனம்

* அகஸ்திய ரசாயனம்

* இந்துகாந்த நெய்.

ஆகியவை தொண்டை வலி தீர்ந்தபிறகு தகுதிவாய்ந்த ஆயுர்வேத மருத்துவரின் தக்க ஆலோசனை படி கொடுத்துவர நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.

உணவுகளில் கவனம் தேவை

* அதிகமான உணவு மட்டுமல்ல கடினமான உணவுகளையும் தவிர்த்துவிடுங்கள். இது தொண்டை வலியை மேலும் அதிகமாக்கும். இயன்றவரை திரவ ஆகாரங்கள், சூப், கஞ்சி போன்றவை தொண்டைவலியைக் குறைக்கும்.

* குளிர்ந்த நீர், குளிர்பானம் அல்லது குளிர்சாதனப்பெட்டியில் இருந்து வெளிவரும் எதையும் தவிர்க்க வேண்டியது அவசியம்.

* பொது இடங்களில் குடிநீர் பெற்று குடிப்பதை தவிர்க்கவும்.

* எண்ணெய் மற்றும் பொரித்த உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.

* இரவில் தயிர் தவிர்க்கவும்.

தொகுப்பு: உஷா நாராயணன்

Related Stories: