கல்லூரிக்கு வழியில்லாமல் ஆபத்தான முறையில் கால்வாயை கடக்கும் மாணவர்கள்

பரமக்குடி, ஜூன் 21:  பரமக்குடியில் அரசு கல்லூரி மற்றும் அழகப்பா பல்கலைக்கழக மாலைநேர கல்லூரி இருக்கும் நிலையில், புதிதாக கடந்த 5 வருடத்திற்கு முன் தமிழக அரசின் உத்தரவின் பேரில், அழகப்பா பல்கலைக் கழகத்தின் சார்பாக மேலும் ஒரு உறுப்பு கல்லூரி துவங்கப்பட்டது. கட்டிடம் இல்லாததால் ஓட்டபாலம் பகுதியில் உள்ள சேதுபதி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் கட்டத்தின் ஒரு பகுதியில் இயங்கி வந்தது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத வேந்தோனி கண்மாய் பகுதியில் கட்டிடம் கட்டப்பட்டு கடந்தாண்டு கல்லூரி மாற்றப்பட்டது. இங்கு பெரும்பாலும் படிக்கும் மாணவ,மாணவிகள் கிராமங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள், பேருந்து நிலையம் வந்து, கல்லூரிக்கு பேருந்து இல்லாததால், வாரசந்தை வழியாக இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அமைக்கப்பட்ட சாலையில் 4 கி.மீ தூரம் நடந்து செல்லவேண்டியுள்ளது. அதேபோல் ஜந்துமுனை சாலையிலிருந்து பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் வழியாக 3 கி.மீ தூரம் நடந்து வரவேண்டியுள்ளது.

இதனால் நடப்பதற்கு பயந்துகொண்டு மாணவ,மாணவியர் கல்லூரிக்கு எதிராக உள்ள ரயில் நிலையத்திற்கு சென்றால் எளிதாக பேருந்து நிலையம் சென்றுவிடலாம் என்பதால், வைகை ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் ரீச் கால்வாயை கடந்து செல்கின்றனர். இந்த கால்வாயில் தண்ணீர் வரத்து இல்லாததால், கழிவுநீர் செல்கிறது. இந்த கழிவுநீர் செல்லக் கூடிய பகுதியில் உயிரை பலிவாங்கும் பாதாள குழிகள் உள்ளதை அறியாமல் மாணவ,மாணவியர் சென்று வருகின்றனர். அப்படியே கருவேல மரங்களையும், பாதாள குழிகளை தாண்டி வந்தாலும் ஆபத்தை உணராமல் ரயில் பாதையை கூட்டம் கூட்டமாக கடந்து செல்கின்றனர். தற்போது அரசு அனைத்து உறுப்பு கல்லூரிகளும் அரசு கல்லூரியாக மாற்றப்படும் என தெரிவித்துள்ளதால், அரசு உடன் மாணவ,மாணவிகளுக்கு கல்லூரி சென்றுவர காலை மற்றும் மாலை வேளைகளில் பேருந்து வசதி செய்து கொடுக்கவேண்டும். இல்லையெனில் தற்காலிகமாக கால்வாயில் பாலம் அமைத்து ரயில் நிலையம் வழியாக கல்லூரி வருவதற்கு முறையான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமக்குடி எஸ்டிபிஜ தொகுதி பெறுப்பாளர் கனி கூறுகையில், ‘‘கல்லூரிக்கு சென்று வர மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பேருந்து வசதிகள் இல்லாதால் ஆபத்தான முறையில் கருவேல மரங்களையும், கழிவுநீர் கால்வாயை கடந்து வருவது வேதனையாக உள்ளது. தனியாக மாணவியர் வருவது பாலியல் ரீதியான பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதால், கலெக்டர் கல்லூரிக்கு பேருந்து வசதிகளை செய்து கொடுப்பதுடன் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: