கடலாடியில் மழைநீர் வடிகால் அமைக்க ஆய்வு

சாயல்குடி, ஜூன் 21: கடலாடியில் மழை காலங்களில் மழை தண்ணீர் மற்றும் கழிவுநீர் வழிந்தோட வசதியில்லாததால் வீடுகளுக்குள் புகுவதாக கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். இதன் பேரில் கலெக்டர் நடராஜன் உத்தரவின்பேரில், கால்வாய் அமைக்க ஊராட்சி உதவி இயக்குனர் செல்லத்துரை தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். கடலாடியில் சர்ச் தெரு, சந்தனமாரியம்மன் கோயில் தெரு, மங்கள விநாயகர் கோயில் தெரு, பள்ளிவாசல் தெரு ஆகிய தெருக்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மழை பெய்யும் காலங்களில் கடலாடியின் பல்வேறு பகுதிகளிலிருந்து இதன் வழியே ஓடி வரும் தெருத்தண்ணீர் ஓட வழியில்லாமல் அருகிலுள்ள வீடுகளுக்குள் புகுந்தது.

மங்கள விநாயகர் கோயில் முன்புறம் பாதியிலேயே நிற்கும் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து பெருகி வரும் கழிவுநீரால் அப்பகுதி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.

தெருக்களில் உள்ள பள்ளமான பகுதிகளில் தண்ணீர் பெருகி கிடப்பதால் கொசு உற்பத்தியாகி டெங்கு போன்ற விஷ காய்ச்சல்களும் பரவி வருவதாக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் நடராஜன் உத்தரவின் பேரில் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை தலைமையில், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி, இளங்கோ, உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் பொதுமக்களிடம் கருத்துகேட்டு, மழை தண்ணீரால் பாதிக்கப்படும் பகுதிகளை நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மழை காலங்களில் தண்ணீரை வெளியேற்ற மங்கள விநாயகர்கோயில் தெரு முதல் பூதங்குடி கண்மாய்வரை வரத்து கால்வாய் அமைக்கப்படும் என்றனர்.

Related Stories: