ராமேஸ்வரம் கோயிலில் ராவண சம்ஹாரம்

ராமேஸ்வரம், ஜூன் 21: ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு நேற்று ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இன்று விபீஷணர் பட்டாபிஷேகத்தை முன்னிட்டு பகல் முழுவதும் கோயில் நடை அடைக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து சீதையை மீட்டு திரும்பிய ராமர், ராவணனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்தார். சிவ பூஜைக்காக லிங்கம் கொண்டு வர கயிலாயம் சென்ற அனுமன் வரத்தாமதம் ஆனதால் கடற்கரை மணலில் சீதையினால் வடிக்கப்பட்ட மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்து சிவ வழிபாடு செய்தார்.சீதையால் பிடிக்கபட்ட மணல் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ராமர் வழிபட்டதால் உருவான ராமேஸ்வரத்தின் வரலாற்றை சித்தரிக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நேற்று ராமநாதசுவாமி கோயிலில் துவங்கியது.

முதல் நாள் திருநாளான நேற்று மாலை 6 மணிக்கு ராமர், சீதை, லெட்சுமணர் மற்றும் அனுமனுடன் திட்டகுடி நான்கு முனை சந்திப்புக்கு எழுந்தருளியதை தொடர்ந்து ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் குருக்கள் உதயகுமர், ராவணன் தலையை கொய்து ராவண சம்ஹாரம் நிகழ்வை நடத்திட தொடர்ந்து ராமருக்கு சிறப்பு தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  கோயில் இணை கமிஷனர் மங்கையர்கரசி. உதவி கமிஷனர் பாலகிருஷ்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழாவின் இரண்டாம் நாளான இன்று தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலில் விபீஷணர் பட்டாபிஷேகம் வைபவம் நடைபெறுகிறது. இன்று அதிகாலை 6 மணிக்குள் ஸ்படிகலிங்கபூஜை மற்றும் காலபூஜைகள் முடிந்து 7 மணிக்கு ராமர், சீதை, விபீஷணர் கோதண்டராமர் கோயில் எழுந்தருளுகின்றனர். அங்கு மதியம் ஒரு மணியளவில் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு ராமர் புறப்பாடானவுடன் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்படும். பகல் முழுவதும் அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாள் சன்னதியில் வழக்கமான பூஜைகள் நடைபெறுகிறது.

Related Stories: