வாகன நெரிசலை தவிர்க்க பரமக்குடியில் கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள்

பரமக்குடி, ஜூன் 21: பரமக்குடி நகர் பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் உள்ளது. தற்போது வாகன நெரிசல் அதிகரித்து வருவதால், நடைமுறை படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி மைய பகுதி என்பதால் இதனை சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பொருள்களை வாங்கவும் விற்பனை செய்யவும் தினமும் வந்து செல்கின்றனர். அதைபோல், பெரிய அளவில் பொருள்களை வாங்க நயினார்கோவில்,  போகலூர், பார்த்திபனூர், முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் வந்து செல்வதால் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கிறது. பரமக்குடி நகர், மேலும், மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி உள்ளதால், அதிமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. அதனை சமாளிக்க முன்னாள் ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து மாற்றம், நோ பார்க்கிங், ஒருவழி சாலை, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரமைப்பு, வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள், சரக்கு வாகனங்கள் நகர் பகுதிகளுக்கு வந்து செல்வது உள்ளிட்ட சில திட்டங்களை பொதுமக்கள், வியாபாரிகள், டிரைவர்கள், வாகன உரிமையாளர்களை கொண்டு தீர்மானிக்கப்பட்டது.

சில மாதங்கள் மட்டுமே இவை நடைமுறை படுத்தப்பட்டது. பின்னர் இந்த திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டது. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் நகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கண்ட இடங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதால், ஆற்றுப்பாலம், முத்தாலம்மான் கோவில், ஜனதா மெடிக்கல், ஈஸ்வரன் கோவில், காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் எதிரே இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் தாறுமாறாக நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். ஆம்னி பேருந்துகளை லேனா மஹால் எதிரே உள்ள பகுதியில் நிறுத்தும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். போக்குவரத்து விதிமுறைக்கு முரணாக இயக்கப்படும் வாகனங்கள் மீதும், அறிவிப்புக்கு எதிராக நிறுத்தப்படும் வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். முடங்கியுள்ள திட்டங்களை செயல்படுத்தி பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: