பாண்டியூர் கிராமத்தில் மூடப்பட்ட கழிப்பறையால் கிராம மக்கள் அவதி

பரமக்குடி, ஜூன் 21: பாண்டியூர் கிராமத்தில் உள்ள கழிப்பறை வளாகம் பராமரிப்பு இல்லாததால் கிராமமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

கிராமங்களில் தொற்றுநோய்கள், வியாதிகளை தடுக்கும் விதமாக திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதையொட்டி கடந்த 2002, 2003ல் எம்எல்ஏ நிதியிலிருந்து கிராமத்தில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள்  வசதிக்காக பல ஊராட்சிகளில் கழிப்பறை வளாகங்கள் கட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு வந்த இந்த கழிப்பறைகள் பின்னர் பராமரிப்பில் மந்தம் நிலவியது.

இந்நிலையில் தற்போது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு பல ஊராட்சிகளில் கழிப்பறை வளாகங்கள் பூட்டியே கிடக்கிறது. இதனால் கிராமத்தில் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாத மகளிர், குழந்தைகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பரமக்குடி அருகே பாண்டியூர் கிராமத்தில் உள்ள கழிப்பறை வளாகத்தில் கதவுகள் இல்லாத நிலையில் கிராம மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. வரும் காலங்களில் ஊராட்சி நிர்வாகத்தினர் கழிப்பறை வளாகத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பாண்டியூர் சுந்தரம்மாள் கூறுகையில், ‘வசதி இல்லாத பலரும் இந்த கழிப்பறை வளாகத்தையே நம்பி இருந்தனர். தற்போது பூட்டி கிடக்கும் கழிப்பறை, குளியலறையால் யாருக்கும் பயன் இல்லை. இதனால் கிராம பெண்கள் பல வருடங்களாக திறந்த வெளியை அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். அதிகாரிகள் சேதமடைந்து கிடக்கும் கழிப்பறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Related Stories: