ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த தம்பியை அண்ணன் வெட்டிக்கொன்ற சம்பவம்: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி: ஆன்லைன் ரம்மி  விளையாடி பணத்தை இழந்த தம்பியை அண்ணன் வெட்டிக்கொன்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி  தில்லானத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி, இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் கொண்ட இவர் இந்த விளையாட்டின் மூலம் பல லட்சம் ரூபாயை இழந்திருக்கிறார். அதுமட்டுமின்றி தனது அண்ணன் முத்துராஜிடம் ரூ. 3 லட்சம்  கடன் பெற்று, அந்த பணத்தையும் ஆன்லைன் ரம்மியில் விளையாடி இழந்துள்ளார்.

இந்த நிலையில் முத்துராஜ் தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு தம்பியிடம் கேட்டு இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தில்லானத்தம் பகுதியில் உள்ள பூர்வீக வீட்டை விற்று தனக்கு மேலும் பணம் கொடுக்குமாறு நல்லதம்பி, முத்துராஜிடம்  கேட்டிருக்கிறார். இதனால் இவருக்கும் இடையேயான மோதல் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  இதனியடுத்து நேற்று இரவு முத்துராஜ்,  நல்லதம்பியை வாகனத்தில் ஏற்றி  காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவரை கம்பியால் தலையில் தாக்கி, வெட்டிக் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முத்துராஜை  கைது செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர். சூதாட்டம் மூலமாக பணத்தை இழந்து தொடர் தற்கொலைகள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: