காஸ் விலை, டோல் வரி, தங்கம், புதிய வரிவிதிப்பு உட்பட 8 விதமான நடைமுறைகள் இன்று முதல் அமல்: 2023-2024ம் நிதியாண்டு தொடங்கியதால் ஏராளமான மாற்றங்கள்

புதுடெல்லி: 2023-2024ம் நிதியாண்டு இன்று தொடங்கியதால் காஸ் விலை, டோல் வரி, தங்கம், புதிய வரிவிதிப்பு உட்பட 8 விதமான நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. நாடாளுமன்ற பொது பட்ஜெட் (2023-2024) கடந்த பிப். 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இன்று முதல் (ஏப். 1) புதிய நிதியாண்டுக்கான விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. அதாவது இந்த நிதியாண்டுக்கான புது கணக்கு இன்று தொடங்கப்படுவதால், சில விதிமுறைகளும் அமலுக்கு வருகின்றன. அந்த வகையில் இன்று முதல் புதிய வருமான வரி விதிப்பு முறை அமலுக்கு வந்துள்ளது. தங்கம் விற்பனை, காஸ் சிலிண்டர் விலை உள்ளிட்ட 8 விதிமான நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

1. வணிக ரீதியான காஸ் சிலிண்டர்

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, பெட்ரோலிய நிறுவனங்கள் எல்பிஜி காஸ் சிலிண்டர்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன. அதன்படி எல்பிஜி காஸ் சிலிண்டர் விலையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக ரீதியான எல்பிஜி காஸ் சிலிண்டரின் விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் புதிய விலை ரூ.2,028 ஆக இருக்கும். ஆனால் சமையல் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

2. புதிய வரி விதிப்பு

நாடு முழுவதும் இன்று முதல் புதிய வருமான வரி அமல்படுத்தப்பட்டுள்ளன. அதாவது வருமான வரி செலுத்துவோரின் அடுக்குகளின் எண்ணிக்கை 6ல் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டது. புதிய வரி விதிப்பு முறையை பின்பற்றுவோரும், பழைய முறையை பின்பற்றுவோரும் அதற்கான படிவத்தை நிரப்பி தர வேண்டும்.

3. வருமான வரிவிலக்கு அமல்

இன்று முதல் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரித்துள்ளது. புதிய வரிவிதிப்பைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும். புதிய வரி விதிப்பில், வருமான வரிச் சட்டத்தின் 87ஏ பிரிவின் கீழ் வரி விலக்கு ரூ.12,500ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய வரிவிதிப்பின் கீழ், 7 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்தில் பூஜ்ஜிய வரியைப் பயன்படுத்துபவர்களுக்கு 80சி-யின் விலக்கு பலன் கிடைக்காது.

4. டோல்கேட் கட்டணம் உயர்வு

ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் டோல் வரி திருத்தப்படுவதால், நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல் கேட்களில் இன்று முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். டெல்லி மீரட் எக்ஸ்பிரஸ்வே மற்றும் என்எச்-9 ஆகிய இடங்களில் டோல் கேட் கட்டணம் சுமார் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

5. ஹால்மார்க் கட்டாயம்

இன்று முதல் தங்க நகைகளுக்கான ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 6 இலக்க எண் பதியப்பட்ட ஹால்மார்க் முத்திரை இருக்கும் நகைகள் மட்டுமே செல்லுபடியாகும். 4 இலக்க அடையாள எண்ணுடன் விற்கப்பட்ட நகைகள் இனிமேல் விற்பனை செய்யப்படாது.

6. வட்டி விகிதங்கள் அதிகரிப்பு

சிறு சேமிப்பில் முதலீடு செய்பவர்கள் இன்று முதல் அவர்களின் டெபாசிட்டுகளுக்கு கூடுதல் வட்டியைப் பெறுவார்கள். ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான சிறுசேமிப்பு வட்டி விகிதங்கள் 70 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்கள் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ், கிசான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

7. பரஸ்பர நிதிகளில் மாற்றம்

இன்று முதல் கடன் பரஸ்பர நிதிகளில் செய்யப்படும் முதலீடுகள், குறுகிய கால மூலதன ஆதாயத்தின் கீழ் வரி விதிக்கப்படும். நீண்ட கால மூலதன ஆதாயத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளதால், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. 36 மாதங்களுக்கு முன்பு கடன் பரஸ்பர நிதியை மீட்டெடுத்த பின்னர், அதன் யூனிட்களை யாராவது விற்றால், லாபம் குறுகிய கால மூலதன ஆதாயமாக வரி விதிக்கப்படும். ஆனால் 36 மாதங்களுக்கு மேல் வைத்திருந்த பிறகு, யூனிட்களை விற்பதில் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் விதிக்கப்படுகின்றன.

8. பெண்களுக்கான புதிய திட்டம்

பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. பெண்கள் அல்லது சிறுமிகளின் பெயரில் திட்டத்தில் இணைய முடியும். 75வது ஆண்டு சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவைக் கொண்டாடும் வகையில், மகிளா சம்மன் பச்சத் பத்ரா என்ற சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். இத்திட்டத்தில் இரண்டு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

Related Stories: