இளைஞர்கள் புதுமையாக தொடங்கும் முயற்சிகளுக்கு பிரதமர் உதவுகிறார்: சென்னையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

சென்னை: எழுத்தின் மூலமாக ஜாதி உணர்வையும், மத உணர்வையும், பிரிவினையையும்  ஏற்படுத்தக்கூடாது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார். 2022-ம் ஆண்டிற்கான  இலக்கியத்திற்காக வழங்கப்படும் சரஸ்வதி சம்மான் விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் சிவசங்கரிக்கு, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம், குமாரராஜா முத்தையா அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், “எழுத்துக்கான மரியாதை முன்னர் போலவே இப்போதும் உள்ளது. எழுத்துகளை புத்தகத்தில் படிக்கிறோமா அல்லது எலக்ட்ரானிக் மீடியாவில் படிக்கிறோமா என்பதுதான் வித்தியாசம்.

வாக்கு, எழுத்து , சொல் ஆகியவற்றிற்கு இருக்கும் சக்தி என்றுமே மாறாது. 3000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட வார்த்தைகள், இன்றளவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. வார்த்தைகளுக்கு உரிய பலம் என்பது நல்லிணக்கத்தை கொடுக்க கூடியது. புத்தகம் என்பது, நம்மை நாமே பார்த்துக்கொள்ள உதவும் கண்ணாடி, மனிதனை ஆராய்வது மிகவும் கடினம். எழுத்துக்களால் மனிதனை அறிய முடியும். இளைஞர்கள் தங்களது சிந்தனைகளை செயல்படுத்தக்கூடிய ஸ்டார்ட் -அப்களுக்கு பிரதமர் நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்.

எத்தனை ஸ்டார்ட்-அப் இருந்தாலும் ஒரிஜினல் ஸ்டார்ட்-அப்புக்கான கண்டுபிடிப்புகளை செய்தவர் தமிழகத்தைச் சார்ந்த ஜிடிநாயுடு தான். 3000 ஆண்டுகளுக்கு  முன் எழுதப்பட்ட நூல்களின் உள்ள எழுத்துக்கள் நல்லிணக்கத்தையும் நல்ல சமுதாயத்தையும் வலியுறுத்தியது. எழுத்தின் பலத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக எழுதக்கூடாது  கனியன் பூங்குன்றனார் எழுதிய  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாசகம், ஜி 20 மாநாட்டிற்கான லோகோவில் வசுதேவக குடும்பகம் என பொறிக்கப்பட்டு, ஆங்கிலத்தில் ஒன் எர்த் ஒன் ஃபேமிலி என குறிப்பிடப்பட்டுள்ளது. எழுத்தின் மூலமாக ஜாதி உணர்வையும் மத உணர்வையும் பிரிவினையையும்  ஏற்படுத்தக்கூடாது” எனக் கூறினார்.

Related Stories: