கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் முகக்கவசம் இன்று முதல் அமலுக்கு வந்தது

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் உள்பட அனைவரும் கட்டாயம்  முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளத்து. அந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் மற்றும் அவர்களுடன் வருவோர், உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் 100 சதவீதம் முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தார். மேலும், அவர் கூறுகையில், இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

டெல்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகமாக உள்ளது. தமிழகத்தில் குறைவாக இருந்தாலும் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்திட தீவிர கவனம் செலுத்தும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். பொதுவாக எந்த நோய் தொற்றாக இருந்தாலும் பெரும்பாலும் மருத்துவமனைகளில் இருந்தே பரவும். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உள் நோயாளிகள் மருத்துவமனையின் அனைத்து நிலை ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள்  கடைபிடிக்க வேண்டும். கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது இடங்களிலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது’ என்றார். அதன்படி அனைத்து மருத்துவமனைகளிலும் முககவசம் அணிவது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் முகப்புகளில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு முகக்கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகங்களில் இருக்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளனர் என்பதை உறுதி செய்யவும் சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள், அவர்களுடன் வந்தவர்கள் முககவசம் அணிந்திருந்தனர்.

Related Stories: