தமிழ்நாட்டில் மேலும் 8 மாவட்டங்களை பிரிக்க அரசு திட்டம்: பேரவையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தகவல்..!

சென்னை: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை உருவாக்க கோரிக்கை வந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி நேரத்தில், “ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்” என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.

இதேபோல அரசு கொறடா கோவி செழியன், “டெல்டா மக்களின் மனம் குளிர கும்பகோணம்  தனி மாவட்டமாக அமைக்கப்பட வேண்டும்” வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்; 8 மாவட்டங்களை உருவாக்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். 8 மாவட்டங்களை புதிதாக உருவாக்க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். நிதிநிலைக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். கோவில்பட்டி, பழனி, கும்பகோணம், ஆரணி உள்ளிட்ட 8 மாவட்டங்களை புதிதாக உருவாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.

Related Stories: