தெப்பக்காட்டில் பராமரிப்பு பணிகள் தீவிரம் முதுமலைக்கு 9ம் தேதி பிரதமர் வருகை: மசினகுடி பகுதியில் ஹெலிபேட் அமைக்க ஆலோசனை

கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டுக்கு வருகிற 9ம் தேதி பிரதமர் வருகையையொட்டி முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து  வருகிறது. கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடைபெறும் தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகிற 9ம் தேதி மைசூர் வருகிறார். அங்கிருந்து பந்திப்பூர் வரும் முதுமலைக்கு வரும் பிரதமர் மோடி, முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் இடம்பெற்று புகழ்பெற்ற பொம்மன்-பெள்ளி பாகன் தம்பதியை நேரில் பாராட்டு உள்ளார்.

மேலும், யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குறித்தும் பார்வையிட உள்ளார். பிரதமர் வருகையையொட்டி முதுமலைப் புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் சாலை விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதேபோல் மசினகுடி சாலை சந்திப்பு பகுதியில் இருந்து தெப்பக்காடு யானைகள் முகம் வரையிலான மாநில நெடுஞ்சாலையில் இருபுறமும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுகின்றன. பிரதமர் மோடி மசினகுடிக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கி தெப்பக்காட்டிற்கு வர வாய்ப்பு இருப்பதால் மசினகுடி பகுதியில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக ஹெலிபேட் அமைக்கும் பணிகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வருவாய்த்துறையினர், காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் நேற்று சிங்கார சாலையை ஒட்டிய பகுதியில் ஹெலிபேட் தளம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

Related Stories: