இரு தரப்பும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுங்கள்: அதிமுக பொதுக்குழு தீர்மான மேல்முறையீடு வழக்கை ஏப்.3 ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மான மேல்முறையீடு வழக்கு திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022 ஜூலை 11- அதிமுக பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லும் என்ற தனிநீதிபதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெற்றது. உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடைபெற்றது.

அப்போது; வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுத்து வாதங்களை கேட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து தரப்புக்கும் சம்மதமா? என நீதிபதிகள் எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர்; இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்; கட்சியில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்ட நடவடிக்கை அனைத்து விதிகளுக்கும் எதிரானது என வாதிடப்பட்டது. எடப்பாடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது; கட்சி, தொண்டர்களை தயார்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதை கருத்தில் கொண்டே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டது. கட்சியில் 95% பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுள்ளனர்.

வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுக்க தயார் என வாதிட்டார். நேரடியாக இறுதி விசாரணைக்கு தயார் என ஓ.பி.எஸ், இ.பி.எஸ். என இரு தரப்பும் பதிலளித்தது. இறுதி விசாரணைக்கு தயார் என பழனிசாமி, பன்னீர் தரப்பு ஒப்புக்கொண்ட நிலையில் திங்கட்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுங்கள்; ஏப்ரல் 3ம் தேதி விசாரித்து உத்தரவு பிறப்பிக்கிறோம் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Related Stories: