பிலிப்பைன்ஸ் கப்பலில் திடீர் தீ- 31 பேர் பலி

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.  பிலிப்பைன்ஸ் நாட்டின் துறைமுக நகரமான ஜம்போங்கா நகரில் இருந்து கப்பல் ஒன்று சுலு மாகாணம் ஜோலோ தீவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில் சுமார் 250 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் நள்ளிரவில் பசிலியான் அருகே  சென்றபோது கப்பலின் ஒரு பகுதியில் திடீர் என தீப்பற்றியது. இந்த தீ மளமளவென பரவியது. இதன் காரணமாக பயணிகள் அலறி கூச்சலிட்டனர். பலர் உயிருக்கு பயந்து கடலில் குதித்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் கடலோர காவல்படையினர் அங்கு விரைந்தனர். சிறிய படகுகள் மூலமாக கப்பலில் இருந்த பயணிகள்  மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 31 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. மேலும் 23 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கப்பல் பயணிகள் 7 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையினர்  ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: