கண்ணுக்கு தெரியாத கணக்குக்கு மாற்றம் ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.5 கோடி மாயம்: சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக ஆட்சியில், தமிழக கஜானாவில் இருந்து ரூ.5 கோடி பணம் ஆளுநருக்கு வழங்கப்பட்டு, அந்த பணத்தை வைத்து தனியார் தொண்டு நிறுவனமான அட்சய பாத்திரம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தொண்டாமுத்தூர் எஸ்.பி.வேலுமணி (அதிமுக) பேசியதாவது: அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடியால் துவக்கி வைக்கப்பட்ட காலை உணவு திட்டம், இந்தியாவிலேயே தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் காலை உணவு சாப்பிட்டு மாணவர்கள் உற்சாகமாக கல்வி பயில உதவியாக இருந்தது. சேர்க்கை எண்ணிக்கையும் அதிகரித்தது. அந்த வகையில் இந்த அரசு 15 மாநகராட்சிகள், 23 நகராட்சிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 15-9-2022 அன்று 1 முதல் 5 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த வேண்டும்.

அமைச்சர் கே.என்.நேரு: இந்தியாவில் முதன்முறையாக நம்முடைய முதல்வர் தான் காலை உணவு திட்டத்தை அறிவித்தார்கள். நீங்கள் அறிவித்ததாக சொன்னீர்கள். ஆனால், எங்கும் அறிமுகப்படுத்தவில்லை. தனியார் தொண்டு நிறுவனமான அட்சய மூலம்தான் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை ஆரம்பித்தது முதல்வர் மு.க.ஸ்டாலின், அதை செயல்படுத்தியது மு.க.ஸ்டாலின். ஆனால் அந்த பெயரை நீங்கள் வாங்க பார்க்கிறீர்கள். அது எப்படி முடியும்?

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: அட்சய பாத்திரம் என்பது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். அட்சய பாத்திரம் என்பது அரசுக்கு சொந்தமானதல்ல. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் அரசு மூலம் உதவ முன் வருவார்கள். அதை பெற்றுக்கொள்வது அரசின் கடமை. அந்த வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஒரு திட்டத்தை தனது அரசின் திட்டம் என்று தம்பட்டம் அடிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

வேலுமணி: எடப்பாடி முதல்வராக இருக்கும்போது தனியார் தொண்டு நிறுவனம் கொண்டு வந்ததை நாங்கள் மறுக்கவில்லை. தன்னார்வ தொண்டு நிறுவனம் என்றாலும், அதற்கு ஏற்பாடு செய்தது அதிமுகதான்.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: காலை உணவு திட்டத்தை பற்றி அதிமுக உறுப்பினர் பேசினார். அதாவது, ஆளுநர் மாளிகைக்கு, கடந்த ஆட்சியில் குறிப்பிட்ட ஒதுக்கீடுகளில் திடீரென சில மாற்றங்கள் வந்ததாக எனக்கு தகவல் வந்ததால் ஆய்வு செய்தேன். 2018-2019ம் ஆண்டு வரைக்கும் ஆளுநருக்கு மறைமுக கணக்கு என்று ரூ.50 லட்சம் வரைக்கும் ஒதுக்கியது எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கம். அதன்பிறகு 2019-2020ம் ஆண்டு அந்த நிதியை ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கி இருக்கிறார்கள். மேலும் ஆய்வு செய்தால், அந்த ஆண்டே அட்சய பாத்திராவுக்கு இரண்டு தவணையாக தலா ரூ.2 கோடி கொடுத்திருக்கிறார்கள். வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்க்காமல் அவர்கள் தயாரிக்கும் உணவையே மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, அரசு பணத்தை வைத்து, ஒரு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அரசு குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட பணம் அது. பாக்கி ரூ.1 கோடியை ஆளுநர் மாளிகை என்று ஒரு கண்ணுக்கு தெரியாத கணக்கில் செலவு செய்துள்ளனர். அதற்கு அடுத்த ஆண்டும் ஆளுநர் மாளிகைக்கு ரூ.5 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.1 கோடி அட்சய பாத்திரம் திட்டத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு அந்த திட்டமே நின்றுபோய் விட்டது. பாக்கி ரூ.4 கோடி, அவர்களுக்கு விருப்பமான செலவுகளை செய்துள்ளனர். ஆண்டு இறுதியில் ரூ.1 கோடியே 55 லட்சம் அரசு கஜானாவில் இருந்து எடுத்து வேறு ஒரு கணக்கில் போடப்பட்டுள்ளது.

அந்த கணக்கு பற்றி அரசாங்கத்துக்கும் தெரியவில்லை. அந்த பணத்தில் ஆளுநர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கடந்த அரசு பணம் வழங்கியுள்ளது. இது அரசியல் அமைப்புக்கு உட்பட்டதா, இல்லை கட்சி நடத்துபவர்களுக்காக செலவு செய்யப்பட்டதா என்ற அச்சம் வருகிறது. அதற்கு பிறகு, இந்த நிதி தொடர்ந்து சிஏஜி எல்லையை மீறி, அதாவது , பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி செலவு செய்யப்படவில்லை என்றால் அந்த பணத்தை மார்ச் 31ம் தேதிக்குள் திடீரென எடுத்துட்டு போய் கண்ணுக்கு தெரியாத இடத்தில் செலவு செய்வது தவறு என்று சிஏஜி கூறியுள்ளது.

அதனால் இதையெல்லாம் திருத்தும் வகையில் முதல்முறையாக இதற்கு புது விதிமுறைகள் சட்டமன்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று திட்டத்தையும் கொண்டு வந்துள்ளோம். ஆனால் இவர்கள், நிஜமாகவே உணவு வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. என்னை பொறுத்தவரை இந்த மாதிரி ஒரு திட்டம் ஜனநாயகத்துக்கே விரோதமானது. எல்லா துறைக்கும் ரூ.1000, ரூ.10000 தேவையென்றால் மானியக்கோரிக்கையில் வைத்து எடுத்துக் கொண்டு போகிறோம். ஆனால் ரூ.5 கோடியை எந்த காரணமும் இல்லாமல், யாருக்கும் சொல்லத் தேவையில்லாமல், வேண்டும் என்கிறபோது நிதியை மறைமுகமாக மறைமுக கணக்குக்கு எடுத்துக்கொண்டு போவது ஜனநாயக மரபு கிடையாது.

(அதிமுகவினர் எழுந்து அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். )

சபாநாயகர் அப்பாவு: ஆளுநருக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மரபு கிடையாது, சட்டத்திலும் அதற்கு இடம் கிடையாது. ஒரு அந்தரங்கமாக ஆளுநருக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது தவறாக தெரியவில்லையா என்று நிதி அமைச்சர் கேட்டுள்ளார். அதற்கு நீங்கள் (அதிமுக) விளக்கம் சொல்லுங்கள். ஆளுநருக்கு பணம் போனது, எதற்கு போனது என்று சொல்லுங்கள் என்று நிதி அமைச்சர் கேட்கிறார்.

எடப்பாடி: ஆளுநருக்கு தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு உண்டான திட்டங்களை அறிவிப்பதற்கு அரசாங்கத்திடம் கேட்டுள்ளார். அரசாங்கத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அந்த தொகையை, ஆளுநருக்கு கொடுத்து செலவழிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் சொல்கிறார். நான் முதலமைச்சராக இருக்கின்றபோது, நானும், ஆளுநரும் அட்சயா உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தோம். ஏழைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள திட்டம்தான். அப்படியென்றால் ஏழைகளை கொச்சைபடுத்துகிறீர்களா? நீங்கள் கொடுத்தா சரி, நாங்கள் கொடுத்தா தவறா? ஏழைகளுக்கு உணவு கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது.

சபாநாயகர் அப்பாவு: ஒரு ஜனநாயக அமைப்பு, அரசு, முதல்வர், அமைச்சர்கள் என இவர்கள்தான் அரசு நிதியை கையாள்வதற்கு முழு உரிமை உண்டு. ஆனால் அரசு பணத்தை ஆளுநருக்கு கொடுத்து, அவர் மூலமாக அட்சய பாத்திரம் மூலம் யாருக்கோ திட்டத்தை நடத்துவதற்கு ஜனநாயக நாட்டில் எந்த உரிமையும் கிடையாது என்று நிதி அமைச்சர் சொல்கிறார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: அட்சய பாத்திரம் கொடுத்ததோ, அது செயல்படுவதோ வேண்டாம் என்று சொல்லவில்லை. இந்த நிதியை ஒரு காரணத்தை சொல்லி வாங்கி, அந்த காரணத்துக்கு செலவு செய்யாமல் வேறு ஒரு காரணத்துக்கு செலவு செய்வது சரியா? எதற்காக செலவு செய்கிறோம் என்று ெசால்லிவிட்டு, கஜானாவில் இருந்து நேராக பணம் போகிறதே தவிர, இந்த பணத்தை இன்னொருவரை வைத்து செலவு செய்ய வைப்பது என்ன மரபு.

2015ம் ஆண்டு வெள்ளம் வந்தபோது நிவாரணம் வழங்கியதில், இதே தணிக்கை குழு, அறிக்கையில் கூறி இருக்கிறது. அதிமுக அரசாங்கம் நடத்தும்போது ரூ.4 ஆயிரம் கோடி நிவாரணம் பணம் வாங்கி, ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் அந்த ஆண்டுக்குள் செலவு செய்யாமல் வேறு கணக்குக்கு மாற்றப்பட்டு, எங்களுக்கு கணக்கு தெரியாத அளவுக்கு செலவு செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். அரசாங்கத்துக்கு என்ன விதிமுறையோ, அதே விதிமுறைதான் ஆளுநருக்கும்.

அமைச்சர் துரைமுருகன்: இதற்கு ஆளுநர்தான் பதில் சொல்ல வேண்டும்.

Related Stories: