பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கையை மாற்ற வேண்டும்: சபாநாயகரிடம் அதிமுக கொறடா மீண்டும் கோரிக்கை

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்ற வேண்டும் என்று சபாநாயகரிடம் அதிமுக கொறடா நேற்று மீண்டும் வலியுறுத்தினார். அதிமுக உட்கட்சி மோதல் ஏற்பட்ட நிலையில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. மேலும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவராக பதவி வகித்து வந்த நிலையில் அவரது பதவியை பறிக்குமாறும், அவரது இடத்தை மாற்றுமாறும் அதிமுக சார்பில் சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. புதிய எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டது. ஆனால் அதிமுக பொதுக்குழு மற்றும் தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நிலுவையில் இருந்ததால் ஓ.பி.எஸ்.சின் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி மற்றும் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கும் நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில் 2 வழக்குகளையும் விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அதிமுக பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளும் செல்லும் என்று தீர்ப்பு கூறி ஓ.பன்னீர்செல்வத்தின் மனுக்களை தள்ளுபடி செய்தார். நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைத்ததை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின், சட்டப்பேரவை அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை பறிக்கவும், சட்டப்பேரவையில் அவரது இடத்தை மாற்றவும் அதிமுக சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சபாநாயகர் அப்பாவுவை, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி நேற்று காலை சந்தித்து பேசினார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை, எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கவேண்டும். சட்டப்பேரவையில் அவரது இருக்கையை மாற்ற வேண்டும். துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Related Stories: