சென்னை விமான நிலையத்தில் புதிய பிளாசா பயணிகள் ஓய்வு கூடம் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம்

சென்னை, ஜன. 7: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வந்து இறங்கும் பயணிகள் குடியுரிமை சோதனை பிரிவில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, அதன்பின்பு தங்களுடைய உடைமைகளை கன்வேயர் பெல்ட்டில் இருந்து எடுத்துக்கொண்டு, வெளியில் வருவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடுகிறது. அதன்பின்பும், பிக்கப் பாய்ண்டிற்காக, மல்டி லெவல் கார் பார்க்கிங் செல்வதற்கு பேட்டரி வாகனங்களுக்கு நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பல பயணிகள் பேட்டரி வாகனங்களை எதிர்பார்க்காமல், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, மல்டி லெவல் கார் பார்க்கிங் நான்காவது மாடிக்கு பிக்கப் பாயிண்டிற்கு செல்கின்றனர். அப்போதும் தரைதளத்தில் இருந்து பிக்கப் பாயிண்ட், நான்காவது தளத்திற்கு செல்வதற்கு லிப்டடிற்காக நீண்ட நேரம் காத்திருந்து ஏற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்தியாவில் உள்ள எந்த சர்வதேச விமான நிலையத்திலும் இதைப்போல் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து, அவதிப்பட வேண்டிய அவசியம் இல்லை. சென்னை விமான நிலையத்தில் மட்டுமே அதேபோன்ற நிலை காணப்படுகிறது என்று பயணிகள் தரப்பில் தொடர்ந்து பல்வேறு புகார்கள் தெரிவித்தனர்.

இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் டெர்மினல் 1 எதிர்புறத்தில், பயணிகள் வசதிக்காக, பிளாசா என்ற பயணிகள் ஓய்வு எடுக்கும் பகுதியை உருவாக்க முடிவு செய்தனர். அதன்படி தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம், அந்த பொறுப்பு கடந்த 2023ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. 2024ம் ஆண்டு, அக்டோபரில் பணிகள் முடிவடைந்து, பயணிகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி இந்த பயணிகள் ஓய்வு கூடம் அருகே, பிக்கப் பாயிண்ட் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் விமானத்திலிருந்து இறங்கி வெளியில் வரும் பயணிகள், மல்டி லெவல் கார் பார்க்கிங் சென்று, 4 மாடிகள் வரை ஏறி அதன் பின்பு வாகனங்களில் வீடுகளுக்கு செல்லும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்ற நிலை ஏற்பட்டது. 2024 அக்டோபரில் முடிய வேண்டிய பணிகள் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியும் இன்னும் பணிகள் முடிவடையாமல் தொடர்ந்து பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த பிளாசா ஏற்கனவே, கடந்த நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் செயல்பாட்டுக்கு வந்து விடும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

ஆனால் 2026 ஜனவரி தொடங்கியும் இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. மேலும் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் வரையில் தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. பணிகள் முழுமையாக முடிவடையாததால் இதுபோல் தாமதம் ஏற்படுவதாக தெரிகிறது. பிளாசா என்ற ஓய்வு கூடம் அமைப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவது ஏன் என்று விசாரித்த போது, அதை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள், பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்காமல் தாமதமாக செய்து கொண்டு வருவதால், இதுபோல் தாமதம் ஆவதாக கூறப்படுகிறது.

ஆனாலும் பல ஆயிரம் பயணிகள் வசதிக்காக, அமைக்கப்படும் பிளாசா ஓய்வு கூடத்தை விரைந்து பணிகளை முடித்து, பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர இந்திய விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் சமூக வலைதளத்தில் அளித்துள்ள பதிலில், ‘இம்மிகிரேஷன், கஸ்டம்ஸ் போன்ற இடங்களில் அதிக அளவு காலதாமதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் இரவு நேரங்களில், பிக்கப் பாயிண்ட் செல்வதற்கு, கூடுதல் பேட்டரி வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இப்பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு ஏற்படுத்தக்கூடிய, பயணிகள் வசதிக்காக அமைக்கப்படும் பிளாசா எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Related Stories: