பல்லாவரம், ஜன.5: பல்லாவரம் அடுத்த திருநீர்மலை சர்வீஸ் சாலையில் நேற்று முன்தினம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், விரைந்து சென்ற போலீசார், அங்கு புதரில் மறைந்து இருந்து கஞ்சா விற்ற 6 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள், குன்றத்தூர், நந்தவனம் நகர், 2வது மெயின்ரோடு பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் (52), ஈசா பல்லாவரம், கம்பர் தெருவை சேர்ந்த கோகுல் (22), பல்லாவரம் புருஷோத்தமன் தெருவை சேர்ந்த ஷியாம் (21), கிருஷ்ணாபுரம், மல்லிகா நகர் பகுதியை சேர்ந்த விஷ்வா (21), புரசைவாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கார்த்திக் (29) மற்றும் பொழிச்சலூர், இரட்டைமலை சீனிவாசன் தெருவை சேர்ந்த கிஷோர் (30) என்பது தெரிய வந்தது.
இவர்கள், ஆந்திரா, பீகார், மேற்குவங்கம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை மொத்தமாக விலைக்கு வாங்கி வந்து, அதனை சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், குன்றத்தூர் ஆகிய சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும், வட மாநில இளைஞர்களுக்கும், 50 கிராம் கஞ்சா 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்களை கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
