பெரம்பூர், ஜன.5: கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான உடற்பயிற்சி கூடத்தில் மாதந்தோறும் பணம் கட்டி தினமும் 50க்கும் மேற்பட்டோர் காலை, மாலை ஆகிய 2 வேலைகளில் உடற்பயிற்சி செய்து வந்தனர். இதில் சிலர் ஒரு வருடத்துக்கு மொத்தமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி, உடற் பயிற்சி செய்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை சிலர் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்யவந்தபோது உடற்பயிற்சி கூடம் மூடப்பட்டு கிடந்தது. இதையடுத்து உடற்பயிற்சி கூடத்தை நிர்வகித்து வந்த ராஜேந்திர பிரசாத், உரிமையாளர் அன்னபூரணி, சீனிவாசன், மேலாளர் சுஜித் ஆகியோருக்கு செல்போனில் தொடர்புகொண்டு கேட்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது.
இதையடுத்து, உடற்பயிற்சி கூடத்தில் பணம் கட்டியிருந்த கொடுங்கையூர் எஸ்ஏ.காலனி பகுதியை சேர்ந்த சேவியர் சுகன் (27) உள்பட பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், இதே உடற் பயிற்சி கூடத்துக்கு சொந்தமான நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை கிளைகளிலும் உடற்பயிற்சி கூடத்தை மூடிவிட்டு உரிமையாளர் தலைமறைவானது தெரிந்தது. இதர உடற்பயிற்சி கூடங்களிலும் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி ஏமார்ந்தவர்கள், காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான உடற்பயிற்சி கூட உரிமையாளரை தேடி வருகின்றனர்.
