தமிழ்நாட்டில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் இருந்து சிறார்கள் தப்பிச் செல்லாத வகையில் தகுந்த நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் இருந்து சிறார்கள் தப்பிச் செல்லாத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் உரிய வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பு இல்லங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து நேற்று முன்தினம் 6 சிறார் கைதிகள் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு இல்லத்தில் உள்ளவர்களை தாக்கிவிட்டு அங்குள்ள 6 சிறார்கள் தப்பியோடியதாகவும், இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதே பாதுகாப்பு இல்லத்தில் உள்ள சிறார்கள் நேற்று ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், இன்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற சிறார்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்தார். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

Related Stories: