ஓபிஎஸ் வழக்கு தள்ளுபடி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உடனடியாக அறிவிப்பு; மேல் முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவி மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கை  தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பு வந்த சிறிது நேரத்தில் எடப்பாடி பழனிசாமி, பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கம் செய்து நிறைவேற்றியது உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி குமரேஷ்பாபு முன்பு கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அப்துல்சலீம், வைத்திலிங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம், ஜெ.சி.டி.பிரபாகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் மற்றும் இளம்பாரதி ஆகியோரும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி குமரேஷ்பாபு நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: மனுதாரர்கள் பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்தும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அ.தி.மு.க. கட்சியின் விதி 43ல் கட்சியில் புதிய விதியை உருவாக்கவும், ஏற்கனவே உள்ள விதியை ரத்து செய்யவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. பொதுக்குழுதான் அதிக அதிகாரம் படைத்தது என்று கூறப்பட்டுள்ளது. மனுதாரர்களும் இதை மறுக்கவில்லை. கட்சியில் உள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,190 பேர் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, பொதுக்குழுவை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழுவில், 2,460 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அனைத்து தீர்மானங்களும் ஏகமனதாக அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. எனவே, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லத்தக்கதுதான். கடந்த 2021 டிசம்பர் 1ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு 2022 ஜூன் 23ல் நடந்த பொதுக்குழு ஒப்புதல் தரவில்லை. இந்த நிலையில், ஒருங்கிணைப்பாளரால் தன்னிச்சையாக பொதுக்குழுவை கூட்ட முடியாது. எனவே, ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான அறிவிப்பை ஜூலை 1ம் தேதி வெளியிட்டதில் எந்த விதிமீறலும் இல்லை.

கட்சியின் ஒட்டுமொத்த அதிகாரமும் பொதுச்செயலாளருக்குத்தான் உள்ளது. இதை மனுதார்களும் மறுக்கவில்லை. எனவே, பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த கமிட்டியை உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் எந்த முரண்பாட்டையும் காண முடியவில்லை. எனவே, தேர்தலை நடத்த கமிட்டியை உருவாக்க இயற்றப்பட்ட தீர்மானமும் சரிதான். உட்கட்சி தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடாமல் இருப்பதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்பு அதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கவில்லை.

ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு 7  நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்  அனுப்ப வேண்டும் என்று கட்சி விதி 6ல் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதி  மீறப்பட்டு மனுதாரர்களிடம் விளக்கம் கேட்காமல் அவர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி கட்சி அலுவலகத்தையே சூறையாடி அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டனர். எனவே, அவர்களை கட்சியை விட்டு நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர்கள் தொடர்ந்த பிரதான வழக்கின் விசாரணையில் முடிவு எடுக்கலாம்.

 ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக இருப்பதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவர்களை நீக்கினால் அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது தொகுதி மக்களுக்கும் பாதிப்பு வரும் என்று அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. அதேநேரம், இதன் அடிப்படையில் ஏதாவது ஒரு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தால் அது கண்டிப்பாக அ.தி.மு.க.வுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும். பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதித்தால் தலைமை இல்லாமல் கட்சிக்கு பெரிய பாதிப்பையும், கட்சியில் உள்ள 1.55 கோடி தொண்டர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியதை நீதிமன்றம் நிராகரிக்கிறது.

 எனவே, பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நிராகரித்து உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தீர்ப்பு காலை 10.30 மணிக்கு மேல் வெளியானது.  தீர்ப்பு வெளியானதும், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையாளர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் வந்தனர். அங்கு தயாராக இருந்த நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், செண்டை மேளம், பேண்ட் வாத்தியங்கள் முழங்க கொண்டாடினர்.

இதை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.  காரில் இருந்து இறங்கி, அலுவலகத்துக்குள் சென்றதும், அதிமுக பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, அவருக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்தினர். அப்போது நிர்வாகிகளில் ஒருவர், எடப்பாடி பழனிசாமிக்கு எம்.ஜி.ஆர். அணிந்திருப்பது போன்ற வெள்ளை தொப்பி, கருப்பு கண்ணாடியை கொடுத்து அதை அணிய வைத்தார். எடப்பாடி பழனிசாமி, கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டபோது, கட்சி நுழைவாயிலில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் டாக்டர் சுனில், 150 கிலோ பிரமாண்ட லட்டை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி இல்லத்துக்கு முன்பு கூடியிருந்த தொண்டர்கள், ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்கள்.

* இபிஎஸ்சுக்கு தடை விதிக்க கோரி மனு உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மேல்முறையீடு

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு தள்ளுபடி செய்யப்பட்டதும், தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தடைவிதிக்கக் கோரியும் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் உடனடியாக முறையீடு செய்தனர். அந்த மனுக்களை நாளை (இன்று) விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமியும், மனோஜ் பாண்டியன் சார்பில் வழக்கறிஞர் இளம் பாரதியும் தாக்கல் செய்துள்ள மனுக்களில், தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

கட்சி விதிகளுக்கு எதிராக இந்த தீர்ப்பு உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கோரும் மேல்முறையீடு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடைவிதிக்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்ளான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ மற்றும் ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் இன்று காலை மனுதாக்கல் செய்ய உள்ளனர். எடப்பாடி கேவியட் மனு: இதற்கிடையே, எடப்பாடி சார்பில் வழக்கறிஞர்கள் கவுதம்குமார், பாலமுருகன் ஆகியோர் ஐகோர்ட்டில் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளனர். இது, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அடங்கிய அமர்வில் 39வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

Related Stories: