ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை கண்டித்து எதிர்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு: மாலை காங்கிரஸ் சார்பில் ‘தீபந்த பேரணி’

புதுடெல்லி: ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை கண்டித்து எதிர்கட்சி எம்பிக்கள் நடத்திய அமளியால் நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று மாலை காங்கிரஸ் சார்பில்‘தீபந்த பேரணி’ நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில், ராகுல்காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதனால் அவரது எம்பி பதவியை மக்களவை செயலகம் பறித்தது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது.

நேற்று எதிர்கட்சி எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து வந்து, ஒன்றிய அரசுக்கு எதிராக குரல்களை எழுப்பினர். நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு தொடங்கி 10 நாட்களுக்கு மேலான நிலையில், ஒரு நாள் கூட நாடாளுமன்ற அலுவல் பணிகள் நடைபெறவில்லை. லண்டனில் ராகுல் பேசிய விவகாரம், அதானி குழும விவகாரம், ராகுல் பதவி பறிப்பு விவகாரம் போன்றவற்றால் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடும் முன்பாக ஒன்றிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி நிருபர்களிடம் கூறுகையில், ‘பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில், ஒட்டு மொத்த ஓபிசி சமூகத்தையும் ராகுல் காந்தி அவமதித்துள்ளார்.

பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் (திரவுபதி முர்மு) ஜனாதிபதியான போது, சோனியா காந்தி குடும்பத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவரை காங்கிரஸ் தலைவர் ஒருவர் அவமதித்தார். பிரதமர் மோடியின் இமேஜை காங்கிரஸ் கெடுக்க முயன்று, படுதோல்வி கண்டது. ராகுல் காந்தியின் அரசியல் மனநோய் தற்போது வெளிப்படுகிறது. அவரது இலக்கு பிரதமர் மோடி, பிரதமர் மோடியின் இலக்கு நாட்டின் வளர்ச்சி. ராகுல்காந்திக்கு ஒதுக்கப்பட்ட வீடு அவருக்கு சொந்தமானது அல்ல, நாட்டின் சாமானியர்களுக்கு சொந்தமானது’ என்றார்.

தொடர்ந்து காங்கிரஸ் எம்பியும், நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினருமான மணீஷ் திவாரி அளித்த பேட்டியில், ‘அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற நிலைக்குழு ஆராய பரிந்துரை செய்யுமாறு பாஜக எம்பி ஜெயந்த் சின்ஹாவுக்கு (நிலைக்குழு தலைவர்) கடிதம் எழுதியுள்ளேன். இவ்விவகாரத்தில், செபி, ரிசர்வ் வங்கி, எல்ஐசி, கார்ப்பரேட் விவகார அமைச்சகம் மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரிகளை அழைத்து விசாரிக்க வேண்டும்’ என்றார். பின்னர் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், ‘எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம். நாடாளுமன்ற அலுவல் நடவடிக்கைகள் நடைபெறவில்லை.

ஒன்றிய அரசு நாடாளுமன்றம் செயல்படுவதை விரும்பவில்லை. அதானி, ராகுல் காந்தி, ஜனநாயகம் போன்ற பிரச்னைகளை  எதிர்க்கட்சிகள் எழுப்பும் போது அவர்களின் குரலை நசுக்க விரும்புகிறார்கள்’ என்றார். நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் நடந்த ஆளும் பாஜக எம்பிக்கள் கூட்டத்தில், சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் பாஜக வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சியின் தரப்பில்  நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் தலைமையில் எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து எதிர்த்து வந்த, ஆம் ஆத்மி, பிஆர்எஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்ேபாது மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‘அவர்கள் (பாஜக) அவரை (ராகுல் காந்தியை) பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர். அரசு பங்களாவைக் காலி செய்தால், அவர் தனது தாயுடன் வாழ்வார் அல்லது அவர் என்னிடம் வரலாம். பிறரை இழிவுபடுத்தும் போக்கை கண்டிக்கிறேன்’ என்றார். பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றக் கோரி பிஆர்எஸ் எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்தனர். தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளும் கூடின. மக்களவையில் ராகுல்காந்தியின் பதவி பறிப்பை கண்டித்து எதிர்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டதால், அவை நடவடிக்கைகள் தொடங்கிய ஒரு நிமிடத்தில் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. அதேநேரம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக் கோரி, பாஜக ஓபிசி எம்பிக்கள் சார்பில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடந்தது. இந்நிலையில் மீண்டும் தொடங்கிய சபையில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி செங்கோட்டையில் இருந்து டவுன்ஹால் வரை இன்று மாலை ‘தீபந்த பேரணி’ நடத்த காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கட்சி எம்பிக்கள், தொண்டர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: