மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தின் வாயிலாக 258.06 கோடி மகளிர் பயணங்கள் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்: போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தின் வாயிலாக, மகளிர் 258.06 கோடி பயணங்கள் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்  என்று  27.03.2023 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  தகவல் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் தலைமையில் 27.03.2023 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், தனி அலுவலர் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இவ்வாலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் பொதுமக்கள் பெரிதும் சார்ந்துள்ள பேருந்து போக்குவரத்தினை நிறைவாக அளித்திட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியதற்கு ஏற்ப அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சேவையினை இந்திய அளவில் முதல் இடத்திற்கு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச்  செயலாளர் அவர்கள், போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் அலகுகளான பேருந்துகள் இயக்கம், ஓட்டுநர்கள் நடத்துநர்கள் உட்பட பணியாளர்களின் எண்ணிக்கை, பயணிகளின் எண்ணிக்கை, மகளிர் கட்டணமில்லா பயணம், ஓட்டுநர்கள் நடத்துநர்கள் பயணிகளை அணுகும் முறை, பேருந்துகளின் பராமரிப்பு, தூய்மை, தினசரி வருவாய் இழப்பு, விபத்துகள், பயணச் சீட்டுக் கட்டணம் தவிர்த்து இதர வருவாய், நவீன தொழில்நுட்பங்கள் அமலாக்கம், 14-வது ஊதிய ஒப்பந்த அமலாக்கம், தொழிலாளர்களின் நலன், கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட செயல்திறன் முன்னேற்றம், பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட அலகுகளை ஒவ்வொரு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களும் விரிவாக விளக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.

அதன்படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக 8 மேலாண் இயக்குநர்களும் மேற்படி பொருள் குறித்து  விவரித்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகரப் பேருந்துகளில், 7,164 சாதாரண நகரப் பேருந்துகள் (74.47%) மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. இதன் மூலம் இதுவரை மகளிர் 258.06 கோடி பயண நடைகளை மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தினால் ஒவ்வொரு மகளிர் பயணியும் அவர்களது மாதாந்திர செலவில் ரூ.888/- சேமிக்கின்றனர் என்பது மாநில திட்டக் குழுவின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், கட்டணமில்லா பயண வசதியினை திருநங்கைகளுக்கு விரிவுப்படுத்தியதன் வாயிலாக 14.75 பயண நடைகளும்,  மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் துணையாளர்களால் 2.05 கோடி பயண நடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 07.05.2021 க்கு முன் 409 வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட 510 பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன. மேலும், 206 வழித்தடங்கள் நீடிக்கப்பட்டு, 260 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 352 நடத்துனர் இல்லா பேருந்துகள் முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்படுவதால் வருவாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் பொதுப் போக்குவரத்தினை ஒருங்கிணைக்க மெட்ரோ ரயில் நிலையத்தினை இணைத்திட ஏதுவாக 30 வழித் தடங்களில் 56 சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. இரு ஆண்டுகளில் 1,312 கிராமங்கள் உட்பட புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதன்முறையாக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாதத்தில் ஒரு நாள் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும், பேருந்தில் பயணம் செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை சரி செய்து வருகின்றனர்.

கொரோனா நோய் தொற்றுக்குப்பின் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட செயல்பாட்டுகள் அலகுகள் குறைந்த நிலையில், போக்குவரத்துக் கழகங்களின் சிறந்த செயல்பாடுகளால் கொரோனா காலத்திற்கு முந்தைய நிலைக்கு வந்துள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் அமல்படுத்தப்பட்டு பயனடைந்து வருகின்றனர். நீண்ட தூரப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, இணையவழிப் பயணச் சீட்டு முன்பதிவு வாயிலாக இருவழிப் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10% தள்ளுபடி அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 6,615 பயணிகள் பயன் அடைந்துள்ளனர்.

மேலும், 1000 புதிய பேருந்துகளை வாங்கவும், அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,000 பேருந்துகளை புதுப்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. KfW, JICA, World Bank ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முன்னேற்றத்தை கண்டுள்ளன. மகளிரின் பேருந்து பயணப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் “நிர்பயா” திட்டத்தின் மூலம், மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களில் கேமராக்கள் மற்றும் அவசரக்கால பொத்தான்கள் பொருத்தப்பட்டு, 2,500 பேருந்துகள் மற்றும் 66 பேருந்து முனையங்கள் / பணிமனைகள் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளன.

“Chennai Bus App” கைபேசி செயலி மூலம் மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்துகள் வருகை மற்றும் புறப்பாடு, தடத்தில் வரும் இடம் ஆகியவற்றை பயணிகள் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.பயணிகள்/பொதுமக்கள் 24 மணி நேரமும்  தங்கள் குறைகள் / புகார்களை தெரிவித்திட உதவி எண் 1800 599 1500 -ஆனது  கடந்த 09.03.2023 அன்று தொடங்கப்பட்டு, இதுவரை 2,302 அழைப்புகள் பெறப்பட்டு, 2,154 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் ‘அரசு பஸ்’ என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், போக்குவரத்துக் கழகங்களின் இயக்க செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் “Dash Board” உருவாக்கப்பட்டு தினசரி கண்காணிக்கப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. வணிக வளர்ச்சிக்காக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள வடபழனி, திருவான்மியூர் மற்றும் வியாசர்பாடி ஆகிய பணிமனைகளை நவீனமயமாக்கிட முன் தகுதி நிர்ணயத்திற்காக (Request for Qualification) முதல்கட்டமாக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

நிர்வாக, மண்டல, பணிமனைகளில் கைரேகை தொழில்நுட்ப வருகை பதிவேடு 88.15% அமுல்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களை 43.28% நிர்வாக, மண்டல, பணிமனைகளில் பொருத்தப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் பக்கவாட்டுகளில் உள்ள பயணச் சுமை பெட்டிகளை மாதாந்திர மற்றும் தினசரி வாடகை அடிப்படையில் பயணம் செய்யாத நபர்களின் சிப்பம் மற்றும் தூதஞ்சல் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு ரூ.31 லட்சம் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கூடுதல் வருவாய்க்காக பெட்ரோல்/டீசல் சில்லரை விற்பனை நிலையங்கள், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் நிறுவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. மேலும், அரசுப் போக்குவரத்துக் கழக கட்டடங்கள் / பணிமனைகளின் கூரைகளில் சூரிய சக்தி மின்னாற்றல் தகடுகள் நிறுவப்பட்டு, மின்சார செலவு மிச்சப்படுத்தப்படுகிறது. விளம்பர வருவாய், அடுத்த பேருந்து நிறுத்த அறிவிப்பு போன்ற செயல்பாடுகள் மூலம் ஏனைய வருவாய் அதிகரித்து வருவதால் அனைத்து பேருந்துகளிலும் இதனை அமுல்படுத்தி வருவாயைக் கூட்ட அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான  14-வது ஊதிய ஒப்பந்தமானது கடந்த 01.09.2019 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும்,  பணியின் போது உயிரிழந்த 132 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதிகப்பட்ச டீசல் சிக்கனத்திற்தாக, கும்பகோணம், கோவை, சேலம் போக்குவரத்துக் கழகங்கள், இந்திய அளவில் 2021-22 ஆம் ஆண்டிற்காக விருது பெற்றுள்ளது. WhatsApp மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் குறைகளை தீர்வு செய்வதற்காக நெறிமுறைகளை உருவாக்கி தீர்வு செய்தமைக்காக, 2022 ஆம் ஆண்டிற்கான விருதானது, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை பஸ் செயலிக்காக “சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (ITS) கொண்ட நகரம்” என்ற விருது மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொன்னான திட்டமான, மகளிர் கட்டணமில்லா திட்டம் மகத்தான வெற்றி பெற்றதை தொடர்ந்து, பயண சேவையில் எவ்வித குறைபாடுகளும், விமர்சனங்களும் இல்லாமல் இத்திட்டத்தை தனிக்கவனம் செலுத்தி மிக சிறப்பாக செயல்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

பேருந்து இயக்கத்தில் பயணக் கட்டண வருவாயை தவிர பிற வழிகளில் வரும் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு அவற்றை விரிவாக்கம் செய்திட வேண்டும் எனவும், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைகளை அவ்வப்போது கனிவுடன் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுண்ணறிவு போக்குவரத்து அலகுகளை முழுவதுமாக பயன்படுத்தி போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்திட தகுந்த  நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்கள்

Related Stories: