அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட்டில் நாளை தீர்ப்பு வழங்குகிறது. அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கம் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி குமரேஷ்பாபு முன்பு கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், மனோஜ்பாண்டியன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அப்துல்சலீம், வைத்திலிங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம், ஜேசிடி பிரபாகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் மற்றும் இளம்பாரதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் என ஓபிஎஸ் கோர்ட்டில் கூறியிருந்தார். வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை தடுக்கவே வழக்கு தொடரப்பட்டதாக ஈபிஎஸ் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்குகிறார். நாளை தீர்ப்பு வெளியாவதால் அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: