அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் தான் இருக்கிறார்கள்: எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி தினகரன் பதிலடி!

திருச்சி: அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் தான் இருக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது; அதிமுகவில் என்னை போல் 1 லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள். எவனாலும் அதிமுகவை அழிக்க முடியாது.

எடப்பாடி பழனிசாமி இல்லை என்றால் எவனாது வளர்ந்து வந்து இந்த கட்சியை ஆளுவான். அதிமுகவில் 1 கோடி தொண்டர்கள் இருக்கும் வரை எவராலும் தொட்டு பார்க்க முடியாது. எவராலும் உரிமை கொண்டாட முடியாது. இது தொண்டனால் ஆளக்கூடிய கட்சி. தொண்டனுக்கு தான் முக்கியத்தும் உண்டு. தொண்டன் தான் இந்த கட்சிக்காக உழைக்கின்றான். தொண்டனின் உழைப்பில் தான் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று பேசியுள்ளார்.

இந்நிலையில், திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது; பதவி வெறியால் ஒரு சிலரின் சுய நலத்தால் அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. அதை மீண்டும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் இணைந்து மீட்டெடுப்போம்.

அதிமுக-வில் ஒரு லட்சம் பழனிச்சாமிக்கள் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார். அதன் மூலம் அதிமுக-வில் அவரே ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக ஒப்புக்கொண்டு விட்டார். அது சரி தான். பதவி பிழைப்பு, சொந்த பிரச்சினை ஆகியவற்றின் காரணமாக ஒரு சிலர் அமமுக-வில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றும் கட்சி மாறுகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: