காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராகுல் காந்தியால் கொண்டுவரப்பட்ட சட்டம் இன்று அவரையே பாதித்துள்ளது: டிடிவி தினகரன்

திருச்சி: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராகுல் காந்தியால் கொண்டுவரப்பட்ட சட்டம் இன்று அவரையே பாதித்துள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறியதாவது: கடந்த 2013-ல் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தால் அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்கலாம் என கூறப்பட்டது. ஒருவர் ஒரு பதவியில் இருக்கும் போது அவரது பதவி பறிபோனால் மேல்முறையீடு செய்து இறுதி தீர்ப்பு வரும் வரை அந்த பதவியில் தொடரலாம் என்ற நிலையை ராகுல் காந்தி ஒத்துக் கொள்ளவில்லை.

பின்னர், அந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ராகுல் காந்தி கொண்டு வந்த சட்டம் இன்றைக்கு அவரையே பாதித்துள்ளது. இதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. முன்னதாக அதிமுக குறித்து பேசிய அவர், பதவி வெறி மற்றும் ஒரு சிலரின் சுயலாபத்தால் அம்மாவின் இயக்கம் தொடர்ந்து பலவீனப்பட்டு வருகிறது. அதனை அதிமுக-வின் உண்மை தொண்டர்கள் ஒன்றிணைந்து மீட்டெடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: