விலங்குகள் மீதான தாக்குதல்களின் விசாரணைக்கு உதவ சிறப்பு அதிகாரிகள் நியமனம்: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

சென்னை: விலங்குகள் மீதான தாக்குதல்களின் விசாரணைக்கு உதவ சிறப்பு அதிகாரியாக எஸ்.பி.சண்முகப்பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். விலங்குகள் நல வாரியம், விசாரணை காவல் அதிகாரிகளுக்கு உதவ சண்முகப்பிரியாவை டிஜிபி சைலேந்திரபாபு நியமித்தார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், விலங்குகள் வதைக்கப்படுவதைத் தடுக்க சிறப்பு அதிகாரியாக சண்முகப்பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் என்.ஆர்.ஐ பிரிவு எஸ்.பி.யாக இருந்த D.சண்முகப்பிரியா, தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு காவல்துறை கள அதிகாரிகள் இடையே விலங்குகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களை கண்காணித்து, விலங்குகள் வதையை தடுக்கக் கூடிய முதன்மை அதிகாரியாக செயல்படுவார். இனி விலங்குகள் வதைக்கு எதிரான எல்லா புகார்களும் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வாயிலாக பதிவு செய்யப்படலாம்.

அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு இது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தத்தம் தலைமையகத்தில் டிஎஸ்பி அல்லது இணை ஆணையர் பதவியில் இருக்கும் ஓர் அதிகாரியை யூனிட் நோடல் ஆஃபீஸராக நியமிக்குமாறும், அவர்களது தொடர்பு விவரங்களை மாநில முதன்மை அதிகாரி சண்முகப்பிரியாவுக்கு தெரிவிக்கவும், தங்களின் பூரண ஒத்துழைப்பை மாநில முதன்மை அதிகாரிக்கு வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: