சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'ஸ்நாக்ஸ்' .. தினமும் 10 நிமிடம் மகிழ்ச்சியான வகுப்புகள் : மேயர் பிரியாவின் அசத்தல் அறிவிப்புகள்!!

சென்னை: சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், இந்த ஆண்டுக்கான வரவு செலவு கணக்கையும், கடந்த ஆண்டு வரவு செலவு கணக்கையும் மேயர் பிரியா தாக்கல் செய்தார்.. இந்த பட்ஜெட்டில்  புதிதாக 83 புதிய அறிவிப்புகளும், பல அதிரடி திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு..

திட்டங்கள் துறை வாரியாக மற்றும் நிதி:

சாலை :

சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை பணிகளை மேற்கொள்ள ரூ. 881.20 கோடி ஒதுக்கீடு.

மழைநீர் வடிகால் :

மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள ரூ. 1,482.70 கோடி ஒதுக்கீடு.

திடக்கழிவு மேலண்மை:

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்புரவு பணிகளுக்கு பொருட்கள் வாங்குவதற்கு மற்றும் குப்பை கொட்டும் கிழங்குகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 260.52 கோடி ஒதுக்கீடு.

பாலங்கள்:

 உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி மற்றும் மூலதன மான்யம் நிதி மூலமாக புதிய பாலங்கள் கட்டுமான பணிகள் மற்றும் பாலங்கள் விரிவுபடுத்தும் பணிகளுக்காக ரூ.102.50 கோடி ஒதுக்கீடு

கட்டடம்:

பெருநகர சென்னை மாநகராட்சியில், NUHM திட்டம், சிங்கார சென்னை - 2.0 திட்டம், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி. தூய்மை இந்தியா திட்ட நிதி ஆகியவற்றினை கொண்டு நகர்புற சுகாதார மையங்கள். கழிப்பறைகள், வாகன இயக்கூர்தி நிலையங்கள் கட்டுதல் பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வகுப்பறை கட்டுதல் வணிக வளாகங்கள் கட்டுதல் மற்றும் பிற பணிக்காக ரூ. 104.17 கோடி ஒதுக்கீடு.

மின்சாரம்:

 நிர்பயா திட்ட நிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதி ஆகியவற்றின் மூலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் புதிய தெரு மின்விளக்குக் கம்பங்கள் அமைக்கும் பணிகளுக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.

இயந்திரப் பொறியியல் :

சென்னை பெருநகர துப்புரவு பணிக்கு தேவையான வாகனங்களை நிர்பயா திட்டம் மற்றும் தூய்மை இந்தியா திட்ட நிதியின் கீழ் கொள்முதல் மேற்கொள்ள ஏதுவாக ரூ.71.29 கோடி ஒதுக்கீடு.

கல்வி :

பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட சிங்கார சென்னை - 2.0 திட்டத்தின் கீழ் கட்டடத் துறையில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூ.55 கோடியிலிருந்தும் மற்றும் சிறப்பு திட்டங்கள் துறையால் சீர்மிகு நகரம் (CITIIS) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.43 கோடியிலும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வகுப்பறைகள் கட்டுதவதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.4 கோடி கட்டடத்துறையில் ஒதுக்கீடு.

மேலும், மாணவர்களுக்கு தேவையான சாய்வு இருக்கைகள், ஆய்வுக்கூட உபகரணங்கள், கணிப்பொறி சார்ந்த உபகரணங்கள், வலைதள அமைப்புகள் போன்ற பணிகளை மேற்கொள்ள ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரம்:

பெருநகர சென்னை மாநகராட்சியில் NUHM திட்ட நிதியின் கீழ் கட்டடத் துறையில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.24 கோடியிலிருந்து சுகாதாரத் துறைக்கான கட்டடங்கள் கட்டப்படும். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் பரிசோதனை கூடங்களை நவீனப்படுத்துதல், நாய்மற்றும் மாடு பிடிக்கும் வாகனங்கள் கொள்முதல் மற்றும் கொசு ஒழிப்பு பணிக்கான புகைபரப்பும் இயந்திரம் கொள்முதல் செய்ய ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு .

குடும்ப நலம்:

நவீனப்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக தேவைப்படும் அறுவை சிகிச்சை அரங்க உபகரணங்கள் / இதர உபகரணங்கள் கொள்முதல் செய்ய ரூ.70 இலட்சம் ஒதுக்கீடு.

 சிறப்பு திட்டங்கள் :

உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, சீர்மிகு நகரத்திட்டம், சிட்டீஸ் திட்டம், நிர்பயா திட்டம், சிங்கார சென்னை 2.0 திட்டம், சென்னை மாநகர பங்களிப்பு (உலக வங்கி நிதி) திட்டம் போன்ற பல்வகை நிதி ஆதாரங்களை கொண்டு மூலதனப் பணிகளை மேற்கொள்ள ரூ.313.45 கோடி ஒதுக்கீடு

பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் :

 சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் மூலதன நிதி ஆகியவற்றினை கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறந்த வெளி நிலங்களில் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்களை அமைத்தல் போன்ற பணிகளுக்காக ரூ.77 கோடி நிதி ஒதுக்கீடு.

மண்டலங்கள் :

தமிழ்நாடு அரசு மான்யத்தின் மூலமாக நகர்ப்புற சுகாதார மையங்கள் கட்டுமானம், தூய்மை இந்தியா திட்டம் 2.0 நிதியின் மூலம் பொதுக் கழிப்பிடம் மற்றும் பிற அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள அனைத்து மண்டலங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ.191.64 கோடி நிதி ஒதுக்கீடு.

மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டுத் திட்டம் :

2023-2024 ஆம் நிதியாண்டிலும் இத்திட்டம் தொடர்ந்து நடைபெற எதுவாக ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு.

மேயர் சிறப்பு மேம்பாட்டு திட்டம்:

2023 - 2024 நிதியாண்டிலும் இத்திட்டம் தொடர்ந்து நடைபெறும் ஏதுவாக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*கடந்த நிதி ஆண்டில் 770 கோடியாக இருந்த நிதி பற்றாகுறை  340.25 கோடியாக குறைவு

*2023_2024 நிதி  ஆண்டில் மாநகராட்சிக்கு 4,131.70 கோடி வருவாய் , 4,466.29 கோடி செலவு.  

*மூலதன வரவு 3,554.50 கோடி, மூலதன செலவு 3,560.16 கோடி

*இதன்படி நிதி பற்றாக்குறை 340.25 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டை விட நிதி பற்றாக்குறை. குறைந்துள்ளது.

*2023-2024-ஆம் கல்வியாண்டில் முன்னுரிமையின் அடிப்படையில் 10 மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்.

*2023-2024-ஆம் கல்வியாண்டில் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 70 Public Address System அமைத்து தரப்படும்.

*மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேவைப்படும் பள்ளிகளில், மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அனைத்து மண்டலங்களிலும் ஆலோசகர்கள் (Councillors) பணியாரத்தப்படுவார்கள்.

*சென்னைப் பள்ளி மேல்தளங்களின் பாதிப்புகளை மறுசீரமைத்தல் மற்றும் அனைத்து விதமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

*சென்னைப் பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் உள்ள 20 பள்ளிகளுக்கு இசைக்கருவிகள் ஒரு பள்ளிக்கு ரூ.25,000/- வீதம் 20 பள்ளிகளுக்கு கொள்முதல் செய்யப்படும்.

*அனைத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் தானியங்கி மணி அமைத்து தரப்படும்.

*சென்னை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாதிரி ஐக்கிய நாடு (MUN) குழு அமைக்கப்படும்.

*மாலை நேர சிறப்பு வகுப்பு மற்றும் குறைதீர் கற்பித்தல் வகுப்பில் (Remedial Class) பங்கேற்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 2023-2024-ஆம் கல்வியாண்டில் ஜனவரி மாதம் முதல் தேர்வு முடியும் (ஏப்ரல் மாதம்) வரை மாலையில் சிறுதீனி வழங்கப்படும்.

*திருக்குறளுடன் அதற்கான விளக்கமும் நாள்தோறும் காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்களை கூறவைத்து தமிழ் பேசும் திறனை மேம்படுத்த 2023-2024-ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

*ஆசிரியர் தொழில் மேம்பாடு : 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு, இதுவரை ரூ.1,500/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. 2023-2024-ஆம் கல்வியாண்டில் ஊக்கத்தொகை ரூ.3,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

*100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு கூடுதலாக அவர்கள் விரும்பும் எந்த Massive Open Online Course (MOOC)-ஐப் பெறுவதற்கும் உதவித் தொகை வழங்கப்படும்.

*10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்களை விடுமுறை நாட்களில், கல்விச்சுற்றுலாவாக நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கு (எ.கா: ஐஐடி-மெட்ராஸ், ஐஐஎம்-பெங்களூர், டெல்லி பல்கலைக்கழகம்) அழைத்துச் செல்லப்படுவர்.

*2023-2024ஆம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, தலா ரூ.10,000/- வீதம் ரொக்கப் பரிசு

நிதி ரூ.10 இலட்சம் வழங்கப்படும். இது தொடர்பாக தனியே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும்.

*சென்னைப் பள்ளிகளில் பயின்று மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்று JEE, CLAT, NIFT & NEET போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, அதன் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசு கல்வி நிறுவனங்களில் மட்டும் (எ.கா. IIT, National Law School of India University - Bangalore, AIIMS and MMC) சேரும் மாணவர்களுக்கு அவர்களின் முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் (Tuition Fee) மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சியால் 2023-2024ஆம் நிதியாண்டு முதல் வழங்கப்படும். இது தொடர்பாக தனியே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும்.

*அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துப் சென்னைப் பள்ளிகளுக்கும் முதலுதவி பெட்டிகள் வழங்கப்படும்.

*சென்னை மாநகர பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் கணினி ஆய்வகங்களில் தீயணைப்பான் கருவிகள் (Fire Extinguisher) பொருத்தப்படும்.

*பள்ளிகளில் பெற்றோர்களுக்கான நோக்குநிலைத் (orientation) திட்டம் 2023-2024ஆம் கல்வியாண்டில், ஆண்டுக்கு ஒருமுறை கல்வி மேம்பாடு குறித்த சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சியையும், SMC கூட்டத்தின் போது இணைத்து செயல்படுத்தப்படும்.

*சென்னை பள்ளிகளில், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வரவும், நாள் முழுவதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கவும், முதல் பாட வேலையின் போது 10 நிமிடம் தினமும் மகிழ்ச்சியான வகுப்புகள் (Happy Class) நடத்தப்படும்.

*அனைத்து சென்னை மாநகரப் பள்ளிகளின் முகப்பிலும் தனித்துவம் வாய்ந்த சென்னைப் பள்ளிகளுக்கான சின்னம் (Logo) அமைக்கும் பணிமேற்கொள்ளப்படும். மேலும், பள்ளிகளில் பயன்படுத்தப்படும் செய்முறை பயிற்சி ஏடுகள், பதிவேடுகள், சான்றிதழ்கள், அறிக்கை அட்டைகள் போன்றவற்றில் சென்னைப் பள்ளிகளுக்கான சின்னம் (Logo) பதிக்கப்படும்.

*சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் அனைவரையும் நான்கு குழுக்களாக அமைத்து அக்குழுக்களுக்கு அரக்கு, பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நான்கு வண்ணங்களில் 28,200 மாணவர்களுக்கு T.Shirt வழங்கப்படும்.

*சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்களின் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஒரு வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்தப்படும்.

*சென்னைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் பள்ளி கல்விக்குப் பின் அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நிகழ்வாக தொழிற்சாலைகளை பார்வையிடுவதற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

*சென்னைப் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் பள்ளிப் படிப்பிற்குப்பின் அவர்களின்எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை பற்றி அறிந்து முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு வழிகாட்டும் விதமாக அது தொடர்பான துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்களின் வாயிலாக வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance Programme) நடத்தப்படும்.

*சென்னைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களை பொதுவான தேர்வின் மூலம், தேர்ந்தெடுத்து போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெறும் வகையில் நேரடியாகவும் மற்றும் இணையதளம் வாயிலாகவும் பயிற்சிகள் வழங்கப்படும்.

*சென்னை தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களால், திட்டமிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு விழா நடத்தப்படும்.

*சுகாதாரத் துறையின் கீழ் பணிபுரியும் NULM தற்காலிக தொழிலாளர்களுக்கு நலப்பொருட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மழைக்கவச உடை (Raincoat) மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படும்.

*சுகாதாரத் துறையின் கீழ் நடத்தப்படும் மருத்துவ முகாம்களுக்கு அனைத்துக் கூட்டங்களுக்கும் கூடாரம், மேஜை மற்றும் நாற்காலி வாடகை முறையில் அமர்த்திக் கொள்ள, மண்டலம் வாரியாக ஒதுக்கீடு தேவையின்படி பகிர்ந்து வழங்கப்படும்.

*கொசு ஒழிப்பு மற்றும் கொசுப்புழு தடுப்புப்

பணிகளைச் செய்யும் • அனைத்துத் தொழிலாளர்களுக்கும், தரமான Vector Control Kit கொள்முதல் செய்து வழங்கப்படும்.

*சென்னை மாநகரில் சுற்றித் திரியும் நாய்களை பிடிப்பதற்கு 6 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு உபயோகத்திற்கு கொண்டு வரப்படும்.

*2023-2024-ஆம் ஆண்டில் இந்த ஆண்டு, 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தர 1 அங்கீகாரச் சான்றிதழ்கள், National Quality Assurance Standards (NQAS) 6T GOT M நிறுவனத்திடமிருந்து பெற்று தரப்படும்.

*மக்களுக்கு ஏற்படும் நோய் நிலையை மதிப்பிடுவதற்காக தண்டையார்பேட்டை தொற்று 2 நோய் மருத்துவமனையில் (Communicable Disease Hospital) சென்னை மாநகரின் கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்.

*ஷெனாய் நகர் மற்றும் ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில், இரண்டு டயாலிசிஸ் மையங்கள் முதற்கட்டமாக 10 இயந்திரங்களுடன் நிறுவப்படும்.

*ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி மீதான தடை அமலாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி சோதனை அடிப்படையில் மஞ்சப்பை வழங்கும் திட்டம், சுயஉதவி குழுக்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும். பொது மக்களின் வரவேற்பு மற்றும் கருத்துகளின் அடிப்படையில் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்.

Related Stories: